Designed by Iniyas LTD
தனி மொழி பிராந்தியங்களை உருவாக்கி தீர்வுகாணமுடியாது – ராஜித சேனாரத்ன
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதே ஒரே தீர்வா கும். தமிழ் மக்களின் உரிமைகளை மதித்தும் அவர்களுக்கான இடத்தை வழங்கியும் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
தனி மொழி பிராந்தியங்களை உருவாக்கி அதன் மூலம் தீர்வுகாணமுடியாது. அதன் செயற்பாடுகள் நாட்டில் பாரிய பிளவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சிங்கள தமிழ் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது.
வடக்கு கிழக்கில் உள்ளடக்கிய தமிழ் மாநிலமும் ஏனைய ஏழு மாகாணங்களை உள்ளடக்கி சிங்கள மாநிலமும் அமைக்கப்பட வேண்டும் என்று வட மாகாண சபை முன் மொழிந்துள்ள தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் நிலவிவரும் இனவாத செயற்பாடுகளும் இனவாத அரசியலும் நிரந்தரமாக விடுபடும் பட்சத்தில் மாத்திரமே இந்த சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு பெறப்படும். எவ்வாறு இருப்பினும் இன்று நாட்டில் அமைந்துள்ள அரசியல் சூழல் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.
அதேபோல் தமிழ் மக்களின் உரிமைகளும் அவர்களுக்கான அங்கீகாரமும் தடைகளின்றி வழங்கப்பட வேண்டும். நாட்டில் மூவின மக்களுக்கு சம உரிமைகளும் அந்தஸ்தும் உள்ளதென உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படாது. மாறாக பிரச்சினைகள் மட்டுமே அதிகரித்து வரும். ஆகவே அதில் சகலரும் அக்கறைகொண்டு செயற்பட வேண்டும்.
எனினும் நாட்டில் தனி மொழிக்கான பிராந்தியங்களை அமைக்கக் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலப்பிரிவாகவும் தெற்கு சிங்கள பிராந்தியமாகவும் அமையுமாயின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.
அதேபோல் அவ்வாறான தனி பிராந்தியங்களை அமைப்பதால் சிங்கள தமிழ் மக்களின் உறவிலும் பாரிய விரிசல் நிலைமை ஏற்படும். இவ்வாறு கருத்துகளை முன்வைத்து நாட்டில் இனவாத செயற்பாடுகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வேலையினை தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள தலைவர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் இன்று சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளும் அவற்றின் ஆலோசனைகளும் எமக்கு கிடைத்து வருகின்றன. அதேபோல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமைத்துவம் நாட்டில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு தெற்கு ஐக்கியத்தை ஏற்படுத்தி நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற விடயத்தில் மக்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.