Designed by Iniyas LTD
தமிழகத்தில் அதிசயமான முதலமைச்சர்கள் – கருணாநிதி
தமிழகம் இதுவரை கண்டிராத அதிசயமான முதலமைச்சர் வேட்பாளர்களாக சிலர் களம் இறங்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அண்ணா, காமராஜரே முதலமைச்சர் வேட்பாளர்களாக தங்களை அறிவித்துக்கொண்டு தேர்தல் களம் கண்டதில்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி காலங்களில் நிறைவேற்றப்பட்ட நல திட்டங்கள், மக்கள் மனதில் நீங்காது இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியை அகற்றி, திமுக ஆட்சியை அரியணையில் ஏற்ற மக்கள் முடிவு எடுத்து விட்டதாக கூறியுள்ள கருணாநிதி, ஆளுங்கட்சியினரே ஒரு சதித் திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுவதற்கு, நெஞ்சில் வஞ்சகத்தைத் கொண்ட சிலரைப் பிடித்துப் பிரச்சாரம் செய்ய வைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியின் புரையோடிய புண்களை, போலிப் பட்டாடை போர்த்தி மறைத்து விட்டு, திமுக மோசம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாற்று அரசியல், தி.மு.க. – அ.தி.மு.க. அணிகளுக்குப் போட்டியாக மூன்றாவது அணி, பல முனைப் போட்டி ஆகியவை தமிழகத்தில் ஏற்கனவே பரிசோதித்துப் பார்க்கப்பட்டவைதான் என்றும், இடதுசாரிக் கூட்டணியை விஜயகாந்த் கூட்டணியாக மாற்றியதன் மூலம், இடதுசாரிகள் இத்தனை நாட்களும் எதை மையப் பொருளாகப் பேசினார்களோ, அதையும் அவர்களே கேலிப் பொருளாக்கி விட்டதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். 1971ம் ஆண்டு பெற்ற வெற்றியை மிஞ்சும் வகையில் இந்த தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் எனவும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.