Designed by Iniyas LTD
தமிழகத்தில் கன்னட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்: ஜெயலலிதாவுக்கு சித்தராமையா கடிதம்
தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் நடத்தும் முழு கடையடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதங்களை தடுக்கவும், கன்னட மொழி பேசும் மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்நடகா முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கன்னட மொழி பேசும் மக்களுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் வன்முறைகள் கர்நாடகாவினால் வன்முறையை தூண்டும் என கடந்த 12-ஆம் தேதி தாம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் கர்நாடகாவில் வன்முறை ஏற்பட்டதாகவும், அது சில மணி நேரங்களில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வன்முறை பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள சித்தராமைய்யா, வன்முறை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். காவிரி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பந்த் மற்றும் போராட்டங்களால் எந்த பயனும் விளையாது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முழு கடையடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சித்தராமைய்யா, இரண்டு மாநிலங்களுக்கிடையே பகைமையை அதிகரிக்ககூடிய எந்த நடவடிக்கையும் இரு மாநிலங்களுக்கும் பாதகமாக அமையும் என கூறியுள்ளார். நாளை நடைபெறும் கடையடைப்பின் போது அசம்பாவிதங்களை தடுக்கவும், கன்னட மொழி பேசும் மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி போராட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் பொறுப்புடன் செயல்படும்படி ஊடகங்களுக்கு தாம் அறிவுறுத்திருப்பதாகவும், தமிழக முதல்வரும் அவ்வாறே அறிவுறுத்தவேண்டும் என்றும் சித்தராமைய்யா கேட்டுக்கொண்டுள்ளார்.