தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் நிலவுகிற திராவிட இயக்கங்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் – இல.கணேசன்

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ராம.ஜெயக்குமார், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆதவன், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூவழகி ஆகியோரை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்தார்.  ila. ganeshan

முன்னதாக விழுப்புரத்தில் இல.கணேசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தமிழக மக்களுக்கு எதிர்பார்த்த நன்மைகளை செய்யவில்லை என கருதி ஒரு மாற்றம் தேவை என கருதுகிற வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதை உணர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் முயற்சித்து ஓரளவு வெற்றி பெற்றோம். 19.6 சதவீத வாக்குகள் கிடைத்தன.  தற்போது நாங்கள் நம்பிக்கையோடு களம் இறங்கியிருக்கிறோம்.

நாளுக்கு நாள் எங்கள் நம்பிக்கையும், மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும் கூடி வருகிறது. தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக, தேசிய சக்தியாக பா.ஜ.க. உருவாகியிருக்கிறது, மக்களின் ஆதரவு பெருகி இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.  தமிழகத்தில் நரேந்திரமோடி 2 சுற்று பிரசாரம் செய்து 3-வது சுற்று பிரசாரத்திற்கு வர இருக்கிறார். அகில பாரத தலைவர் அமித்ஷா 3 சுற்று பிரசாரம் செய்ய வருகிறார். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கின் பிரசாரமும் இருக்கிறது. இன்னும் சில அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல் உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்ய வருகிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த நாங்கள் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறோம். சூழ்நிலை நன்றாக இருக்கிறது, நம்பிக்கை தருவதாக உள்ளது.  விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் அரசியல் பின்னணி ஏனைய மாவட்டங்களை விட வேறுபட்டு இருக்கிறது. இந்த மாவட்டங்களில் சாதி உணர்வு மிக தீவிரமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அந்த சூழ்நிலையை ஏற்படுத்தியவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பா.ஜ.க.விற்கு ஆதரவு பெருகி வருகிறது. எங்களுக்கு கணிசமான வாக்கு சதவீதமும், வெற்றியும் கிடைக்கும்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக நிலவுகிற திராவிட இயக்கங்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம். அந்த இலக்கு வெற்றி பெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் ஆதவன், ராம.ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், வணிகர் அணி கோட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், நகர தலைவர் துரை.சக்திவேல், அரசு மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் தனசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Loading...