தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

ramadasதமிழகத்தில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் அறிக்கையை சுட்டிக்காட்யுள்ளார்.

 மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது தான் அந்த செய்தி ஆகும். அது அதிர்ச்சி மட்டுமல்ல, கவலையும் அளிக்கும் செய்தியாகும்.

 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 8068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1191 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த 853 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

 கடந்த ஆண்டில் மட்டுமின்றி அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

 மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களில் முதலிடம் பிடித்திருப்பது ‘தேர்வில் தோல்வி’ ஆகும். 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 853 பேரில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 247 பேர் தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கிராமப்புற மாணவர்கள் ஆவர்.

இன்னொருபுறம் மாணவர்களின் மன அழுத்தம் அவர்களை மரணத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும் இருக்க வேண்டும். ஆனால், தமிழக பாடத்திட்டம் மனப்பாடத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது; சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக இல்லை. சிந்தனையைத் தூண்டும் கல்வியாக இருந்தால் அது சுகமான அனுபவத்தைக் கொடுக்கும்.

 மாணவர்களைப் போலவே வேலையில்லாதோரும் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாணவர்களின் தற்கொலைகளுக்கு கூறப்பட்ட அனைத்துக் காரணங்களும் இவர்களுக்கும் பொருந்தும்.

 படிப்பதில் உள்ள சிரமமும், படித்தபின் வாழ்வதில் ஏற்படும் பிரச்சினைகளும் ஆண்டுக்கு சுமார் 2500 பேரின் தற்கொலைகளுக்கு வழி வகுக்கின்றன என்றால் அது ஒதுக்கித் தள்ளிவிட்டு செல்லும் விஷயமல்ல. நடைமுறைக்கு உதவாத பாடத்திட்டம் தான் இவ்வளவுக்கும் காரணம் ஆகும்.

 எனவே,அதை புறம்தள்ளிவிட்டு சுகமான, சிந்தனையைத் தூண்டும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க கூடிய கல்வி முறையையும், எளிமையான தேர்வு முறையையும் அறிமுகம் செய்வது தான் இத்தகைய தற்கொலைகளை தடுக்க உதவும். இதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மாணவர்கள் சமுதாயத்தை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...