Designed by Iniyas LTD
தமிழக அரசுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் -ஜெயலலிதா
தமிழர்களின் உரிமைகளை நிறைவேற்ற , மத்தியில் அ.தி.மு.க,. அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவக்கிய அவர், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா லோக்சபா தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று துவக்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் எனது தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கறவை பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகிறோம். 3 லட்சத்து 98 ஆயிரத்து, 292 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. 23 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி, மிதி வண்டிகள், ரூ. 100 கோடி செலவில் கல்லூரி கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளன. மீனவர் நலனுக்கு சிறப்பு நிவாரணமாக ரூ. 4ஆயிரம், மீனவ பெண்களுக்கு ஆயிரத்து 800 , என வழங்கி வருகிறோம்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் வேலையை இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழர்கள் உரிமைகள் காத்திட வேண்டுமெனில் மத்தியில் அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும்.
தமிழகம் தொழில்துறை மற்றும் வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்து மத்திய அரசு விருதுகளை பெற்றுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு எனது முயற்சியின் காரணமாக மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளோம். உயர் சிகிச்சையில் இதுவரை 6 லட்சத்து ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு இட்லி, சாம்பார் சாதம்:
சென்னை ஒமந்தூரார் தோட்டத்தில் உயர் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வழிவகை, குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை, சாலைகள், பாலங்கள் என ஏராளமான பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மை உரிமை பாதுகாப்பில் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. உலமாக்கள் உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது. வக்பு வாரியத்திற்கு 3 கோடி மானியம் வழங்கியுள்ளோம்.
வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 5 லட்சத்து 16 ஆயிரத்து 770 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தானே புயலால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணி நடந்து வருகிறது. மின்சார பற்றாக்குறையை நீக்கியுள்ளோம். சந்தையில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. நாங்கள் விலையில்லா அரிசி வழங்கியிருக்கிறோம். பண்ணை பசுமை வீடுகள் , அம்மா உணவகங்கள், ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் விற்று வருகிறோம். மாநில அரசு மட்டும் தனியாக எதையும் செயல்படுத்த முடியாது. ஆனால் காங்கிரஸ் அரசு எதுவும் செய்வதில்லை.
காங்., செய்த 10 துரோகங்கள்: தமிழக மக்களுக்கு மத்திய அரசு எண்ணற்ற துரோகங்களை செய்து வருகிறது. தமிழர்கள் அழிய காரணமாக இருந்தது முதல் துரோகம். இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும், என பல்வேறு தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தேன். ஆனால் மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா ? இது 2 வது துரோகம், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதில் இழுபறி, பெட்ரோல் விலை உயர்வு, உரவிலை உயர்வு என மத்திய அரசினால் தமிழக மக்களுக்கு இழைத்த துரோகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். துரோகம் செய்த காங்கிரசுக்கும் , இதற்கு துணையாக இருந்த தி.மு.க.,வுக்கும் பாடம் புகட்டும் ஒரு வாய்ப்பு, மக்கள் நீங்கள் பாடம் புகட்டுவீர்களா ?
அண்டை நாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டை காக்க வேண்டிய நிலையில் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் வாங்கப்படும், பாதுகாப்பு துறை பலப்படுத்தப்படும். மக்களின் அரசை காக்கும் வீரர்களுக்கு அனைத்து சலு<கைகளும் தருவோம். தேசப்பாதுகாப்பு உறுதி செய்யப்படும். விலைவாசி உயர்வு, பணவீக்கத்தால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றீர்கள். இதற்கு தவறான பொருளாதார கொள்கை தான் காரணம். இந்தியாவுக்கு தேவையான எண்ணெய் பொருட்கள் 75 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இடைக்கால நிதி நிலை அறிக்கையில், ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதி மிக குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மூல தன செலவு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்கள் வாங்கிட நிதி மிக குறைவு. நிலக்கரி வெட்டி எடுக்கும் உரிமை தனியாருக்கு குறைந்த விலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. உரம் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இப்படிப்பட்ட மத்திய அரசு தேவைதானா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஒன்று. இதற்கு தி.மு.க., தான் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழகமக்கள் நலம் பெற வேண்டும் என்றால் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, அண்டை மாநில நதி நீர்பிரச்னைக்கு தீர்வு காண, இலங்கையை கண்டிக்க ஐ.நா., மூலம் தீர்மானம் நிறைவேற்றவும், கறுப்பு பணம் மீட்கவும், ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தரவும், விலை நிர்ணய கொள்கை மாற்றவும், தனிநபர் வருமான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தவும், அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் இந்தியாவை அமைத்திட எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் என நான் நம்புகிறேன். குடும்ப ஆட்சி களையப்பட வேண்டும். இந்திய திருநாட்டை காப்பாற்றுங்கள், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா என்ற பாடலை நினைவுப்படுத்தி விடை பெறுகிறேன். இவ்வாறு ஜெ., பேசினார்.