தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

Tamil_News_large_1528987_318_219தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. 15வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குகிறது. ஆளுநர் உரையில் தமிழக அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலைகள் குறித்தும், புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15ஆவது சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபையின் முதல் கூட்டம், கடந்த மாதம் 25ம் தேதியன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 232 தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதியன்று நடந்த சட்டசபை கூட்டத்தில், சட்டசபை தலைவராக தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி.ஜெயராமனும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகு, சட்ட சபை கூட்டம் ஜூன் 16ம் தேதியன்று நடைபெறும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

பேரவைத் தலைவரின் அறிவிப்புப்படி, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் கே.ரோசய்யா இன்று உரை நிகழ்த்துகிறார். சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 11 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையாற்ற உள்ளார். சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பிற்பகலில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இதில் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத் தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும்.

இந்த விவாதத்தில் ஆளும்-எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உரையாற்றுவர். இந்த விவாதங்களுக்கு தமிழக அரசு சார்பில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார். பல்வேறு முக்கிய பிரச்னைகளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அரசுத் தரப்பிலும் அந்த விவாதங்களுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், பேரவை கூட்டத் தொடர் விவாதங்கள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...