தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மருத்துவமனைகளில் சாய்வுதள நடைபாதை

தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சாய்வுதள நடைபாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது குறித்து புதிய திட்டத்தை உருவாக்கி, விரைவாக அமல்படுத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.    சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் ஜவஹர்லால் சண்முகம்.tngovt

இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஆஸ்பத்திரியில், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 89 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த ஆஸ்பத்திரியில் தீ பாதுகாப்பு உள்ளிட்ட விதிகளை முறையாக அமல்படுத்தாததால், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை பல அடுக்கு மாடிக் கட்டிடங்களில் செயல்படுகின்றன. இந்த கட்டிடங்கள், தீ பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை. சாய்வுதள நடைபாதை வசதிகள் இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றில் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள நடைபாதை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தவேண்டும். பழைய ஆஸ்பத்திரி கட்டிடங்களிலும், மருத்துவ கல்லூரிகளிலும் இந்த வசதிகளை செய்யவேண்டும். ஒருவேளை இடவசதியில்லை என்றால், மாற்று வழிமுறைகளை கண்டறியவேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுகாதாரத்துறை செயலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மார்ச் 28, 29 மற்றும் ஏப்ரல் 5-ந் தேதிகளில் நடந்தது. கூட்டத்தில் ஆஸ்பத்திரிகளில் சாய்வுதள நடைபாதை அமைப்பது உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து, அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சாய்வுதள நடைபாதை உள்ளிட்ட வசதிகளை உருவாக்குவது குறித்து புதிய திட்டங்களை உருவாக்கவேண்டும். அந்த திட்டங்களை விரைவாகவும் அமல்படுத்தவேண்டும். அதாவது வருகிற ஜூலை 12-ந் தேதிக்குள் இந்த திட்டத்தை வரையறை செய்து, பொதுமக்களின் கருத்தை பெறுவதற்காக விளம்பரப்படுத்தவேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 19-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Comments
Loading...