Designed by Iniyas LTD
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை கண்காணிக்க கேமரா!
இலங்கை கடல் பகுதிக்குள் சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்களா? என்பதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதுடன் அதனை இலங்கை மீனவர்களுக்கு ஒளிபரப்பவும் தயாராகி வருகிறது.
தமிழகத்தின் நாகை மற்றும் ராமேசுவரம் போன்ற பகுதிகளில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அதே நேரத்தில் இலங்கையின் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, கிளிநொச்சி, பேச்சாலை போன்ற 5 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், தமிழக மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பதன் மூலம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், இதனை இலங்கை கடற்படை கண்டுகொள்வதில்லை என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.
இவ்வாறு இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையை குற்றம் சாட்டி வரும் நிலையில், இலங்கை கடல் எல்லையில் என்ன நடக்கிறது என்பதை இலங்கை மீனவர்களுக்கு காண்பிப்பதற்காக நெடுந்தீவு பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளது. இதில் ஒன்று சுழலும் கேமரா ஆகும்.
இந்த கேமராக்களில் பதிவாகும் பதிவுகளை ‘சேட்லைட்’ மூலம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மத்தியில் பெரிய திரைகளில் போட்டுக்காட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் வந்து மீன்பிடிப்பதையும், அதனை இலங்கை கடற்படையினர் கைது செய்வதையும் இலங்கை மீனவர்களுக்கு காண்பித்து போராட்டங்களை தவிர்க்கவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
தேவைப்பட்டால் இந்த கேமரா பதிவுகளை இந்திய அரசு கேட்டால் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று தமிழக மீனவர்கள் எங்கெல்லாம் அத்துமீறி மீன்பிடிப்பார்களோ அந்த பகுதிகளில் எல்லாம் கேமராக்களை பொருத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
கச்சத்தீவில் சர்ச் அமைக்கும் போது, அதன் உயரமான கோபுரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக மீனவர்களின் அத்து மீறல்கள் குறையும் என்று நம்புவதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.