Designed by Iniyas LTD
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை சாதாரணமாக அக்டோபர் மாதம் 20-ந் தேதி தொடங்கும். எனவே தென்மேற்கு பருவமழை முடிய இன்னும் 1 மாதத்திற்கு மேல் உள்ளது. நேற்று வரை தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை இயல்பாக பெய்துள்ளது. குறைவாகவோ, கூடுதலாகவோ பெய்யவில்லை. அடுத்த 2 நாட்களில் ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- 
அடுத்த 2 நாட்களில் அதாவது 11-ந் தேதி ஆந்திரா அருகே மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. அது உருவானபிறகுதான் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று சொல்ல இயலும். இருப்பினும் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் 11-ந் தேதி சில இடங்களில் மழை பெய்யும், 12-ந் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ஆந்திராவில் தான் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் நேற்று காலையில் இருந்து பகல் 1 மணி வரை சுள் என்று வெயில் நன்றாக அடித்தது.
மாலை 4 மணிக்கு மேல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. திடீர் என்று மாலை 5 மணி முதல் 5¼ மணி வரை 15 நிமிடம் எழும்பூர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்தது. சிறிது நேரம் பெய்த போதிலும் பலத்த மழையாக பெய்தது. மழையின் காரணமாக ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் மழை பெய்த பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது.