Designed by Iniyas LTD
தமிழ்ப்பேசும் பௌத்தர்கள் வடகிழக்கில் வாழ்ந்ததால்த்தான் பௌத்த சின்னங்கள் காணப்படுகின்றன – சிவிவி
ஒருகால கட்டத்தில் தமிழ்ப்பேசும் பௌத்தர்கள் வடகிழக்கில் வாழ்ந்ததால்த்தான் பௌத்த சின்னங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன. அதையே தவறாகச் சிங்களப் பெரும்பான்மையினர் பௌத்தம் வடக்கு கிழக்கில் நிலைபெற்றிருந்ததால் இங்கு வாழ்ந்த மக்கள் சிங்களமக்கள் தான் என்றும் தமிழர்கள் இந்தியாவில் இருந்து பின்னைய காலத்தில் வந்து சிங்கள மக்களை விரட்டி விட்டார்கள் என்றும் திரிபுபடுத்தி ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்கள். சிங்கள மொழி என்பதன் உற்பத்தியே பௌத்தத்தின் நிமித்தமே எழுந்தது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆறுமுக நாவலரின் சிலை திறப்பு நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்நத நிகழ்வில் பிரதம விருந்திளராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:-
இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தில் இருந்த தமிழ்ப்பேசும் மக்கள் கூட சரித்திரப்படி பார்த்தால் இந்து தர்ம முறைப்படியே பண்டைய அக்காலத்தில் வாழ்ந்து வந்தவர்கள். இவ்வாறான கௌதம புத்தருக்கு முன்னையதான சரித்திரச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் பௌத்தத்தின் பின்னைய உள்நுழைவால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்திற்கு பௌத்தத்தால் கவரப்பட்டு பௌத்த சமயிகளாக மாறி, அதன்பின்னர் சமய குரவர்களின் வரவாலும் அவர்களின் சமய ஆதிக்கத்தாலும் பௌத்தத்தில் இருந்து விடுபட்டு சைவத்திற்குச் சென்றவர்களே எமது மூதாதையர். ஒருகால கட்டத்தில் தமிழ்ப்பேசும் பௌத்தர்கள் வடகிழக்கில் வாழ்ந்ததால்த்தான் பௌத்த சின்னங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன. அதையே தவறாகச் சிங்களப் பெரும்பான்மையினர் பௌத்தம் வடக்கு கிழக்கில் நிலைபெற்றிருந்ததால் இங்கு வாழ்ந்த மக்கள் சிங்களமக்கள் தான் என் றும் தமிழர்கள் இந்தியாவில் இருந்து பின்னைய காலத்தில் வந்து சிங்கள மக்களை விரட்டி விட்டார்கள் என்றும் திரிபுபடுத்தி ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்கள்.
பௌத்த மதத் தமிழர்களைச் சிங்களவர் என்று தவறாகப் பிரசாரம் செய்கின்றார்கள். ஏன் இராவணனையே ஒரு சிங்களவர் என்கின்றார்கள்! “தெமல பௌத்தயோ” அதாவது “தமிழ் பௌத்தர்கள்” என்ற ஒரு சிங்கள நூல் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன என்பவரால் உண்மையை விளக்கி சில காலத்தின் முன்னர் எழுதப்பட்டது. அதன் மறுபிரசுரிப்பைச் சில பௌத்த பிக்குகள் அண்மையில் தடை செய்துள்ளார்கள்.
இவ்வாறுதான் உண்மையை வெளிவராமல் தடுக்கப்பார்க்கின்றார்கள் பெரும்பான்மையினருள் சிலர். சிங்கள மொழி என்பதன் உற்பத்தியே பௌத்தத்தின் நிமித்தமே எழுந்தது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள். புத்த பிக்குகள் பாளி மொழியை இங்கிருந்த தமிழ் மொழிக்குள் உட்படுத்தியே சிங்கள மொழி பிறந்தது. எனினும் சைவசமயம் மறு சமயங்களால் மங்கிப் போன காலகட்டங்களில் அதனை மேலோங்க வைப்பதற்கு வந்த அவதார புருஷர்கள் தான் எமது சமயகுரவர்கள் நால்வரும் என்று கூறலாம்.