தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முத்துமாரி அம்மன் கோயில் வளாகத்தில் பௌத்த விகாரை

முருங்கனில் அமைந்திருக்கும் பௌத்த விகாரை கோயிலுக்குரிய காணியில் அமைந்துள்ளதாகவும் அதனை மீளப்பெற்று தருமாறும் கோரி முருங்கன் இரட்டைக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயபரிபாலன சபையினர், அந்த விகாரையின் விகாராதிபதிக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.murunkan-temple

வழக்காளிகள் சார்பில் வாதாடிய சட்டத்தரணி த.வினோதன் – குறித்த விகாரை தற்போது அமைந்திருக்கும் காணியில் வழக்காளிகளின் முன்னோர்கள் 1942 ஆம் ஆண்டிலிருந்து ஆலயமொன்றை அமைத்து பூசை, வழிபாடுகளை செய்து வந்தனர் எனவும் 1956ஆம் ஆண்டு இக்காணி நிலஅளவை செய்யப்பட்டு அப்போதிருந்த ஆளுநர் நாயகமான சேர் ஒலிவர் குணதிலக்காவினால் ஆலயத்திற்கென வழங்கப்பட்டதாகவும், ஆலயம் புனரமைக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர் எனவும் பின்னர் 2009 ஆம் ஆண்டு மீளக்குடியேறியபோது அவ்விடத்தில் பொலிஸ் நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தபோது பொலிஸாரிடம் மீளவும் அக்காணியை ஒப்படைக்குமாறு கோரி மனு வழங்கப்பட்டது. எனினும் 2010ஆம் ஆண்டு பொலிஸார் குறித்த காணியிலிருந்து வெளியேறியதும் எதிராளியான விகாராதிபதி காணியை அடாத்தாக கைப்பற்றி சுற்றிவர முள்வேலி அமைத்ததுடன் சிறிய விகாரை ஒன்றையும் அமைத்து “புராதன விகாரை” என பெயரிட்டதுடன் படிப்படியாக அதனை விரிவாக்கி வருவதுடன் அக்காணியிலிருந்து வெளியேற மறுக்கின்றார் எனவும் தெரிவித்து வழக்கிற்கு தேவையான ஆவணங்களையும் மன்றில் சமர்ப்பித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அந்த விகாரையின் விகாராதிபதியை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது

Comments
Loading...