தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்மக்களுக்கான நியாயத்திற்காக ஜெனி­வா­வுக்கு செல்­வதில் என்ன தவறு?

download (2)

வடக்கில் இன்று பாரிய படை சுற்­றி­வ­ளைப்­புக்­க­ளாலும். குடும்பம் குடும்­ப­மாக தமிழ் மக்கள் கைது செய்­யப்­ப­டு­வ­தாலும் அங்கு மக்கள் பெரும் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­ம­ச்சந்­திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய சிறு­பான்மை இன­மான தமிழ் மக்கள் தொடர்ந்து அழிக்­கப்­பட்­டு­வரும் சூழ்­நி­லையில் ஜெனி­வா­வுக்கு செல்­வதில் என்ன தவறு? இதற்கு வழி­காட்­டி­ய­வர்கள் மகிந்தவும் அமைச்­சர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார, எஸ்.பி.திஸா­நா­யக்க ஆகியோருமே. என சபையில் சுட்டிக் காட்­டியள்ளார் சுரேஷ் பிரே­ம­ச்சந்­திரன் .

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்னாள் இடம்­பெற்ற மனித உரிமை ஆணை­யா­ள­ருக்­கான எரி­பொருள் கொடுப்­ப­னவை அதி­க­ரிக்கும் பிரே­ரணை மீதான விவாதத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே கூட்­ட­மைப்பு எம்.பி. சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

வடக்கில் இன்று கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா பிர­தே­சங்­களில் சிங்களப்படை பாரிய சுற்­றி­வ­ளைப்­புக்­களை நடத்தி மக்­களை கைது செய்­கின்­றது. இதில் என்ன விசே­ட­மென்றால் தமிழ் மக்கள் குடும்பம் குடும்­ப­மாக கைது செய்­யப்­ப­டு­கின்­றனர்.
அண்­மையில் மூங்­கி­லாறு உடை­யார் ­கட்டு பிர­தே­சத்தில் இரண்டு ஆண்­களும் அகஸ்­டியன் மற்றும் அவ­ரது மனைவி, மகன், மகள் ஆகியோர் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று விசு­வ­­ம­டுவில் கலா­கரன், சுதா­கரன் என்ற இரண்டு சகோ­த­ரர்கள் கைது செய்­யப்­பட்டு அவர்கள் கடு­மை­யாக தாக்­கப்­பட்டு தற்­போது விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
திரு­கோ­ண­ம­லையில் வைத்து பால­கு­மாரன் தர்­மிளா என்ற பெண்ணும், அவ­ரது கணவரான பால கு­மாரன் யாழ்ப்­பா­ணத்தில் வைத்தும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கிளி­நொச்­சியில் ஜெய­கு­மாரி என்ற தாயும் அவ­ரது மகள் விபூ­சி­காவும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் ஏற்­க­னவே தமது மகன்மார் இரு­வ­ருக்கு அதே போன்று தனது சகோ­த­ரர்­க­ளுக்கு என்ன நடந்­தது என தெரி­யாமல் தவித்துக் கொண்­டி­ருக்கும் நிலையில் இவ்­வா­று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வடக்கில் குடும்பம் குடும்­ப­மாக தமிழ் மக்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். மன்னார் திருக்­கே­தீஸ்­வரர் பிர­தே­சத்தில் 83 மனித எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இது தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­தாது இப்­பி­ர­தே­சத்தில் பழை­மை­யான மயா­ன­மொன்­றி­ருந்­தது என காவல்துறை மற்றும் படை பேச்­சா­ளர்கள் தெரி­வித்­தனர்.

திருக்­கே­தீஸ்­வர பிர­தேசம் என்­பது இந்­துக்கள் வாழும் பிர­தே­ச­மாகும். இங்கு கத்­தோ­லிக்­கர்கள் வாழ­வில்லை. இந்­துக்கள் இறந்தால் சடலம் புதைக்­கப்­ப­டாது. அது எரிக்­கப்­படும். இது தெரி­யாது முட்­டாள்­த­ன­மான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர்.
இதே­போன்று முல்­லைத்­தீவில் 9 எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­தாக இல்லை. உடனே அது புலி சுட்­டது என ஒரே வரியில் பதிலை தெரி­வித்­தனர்.

மனித உரிமை ஆணைக் குழு­வினர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பாக எந்­த­வொரு காவல்நிலை­யத்­திற்கும் படை முகா­முக்கும் செல்ல முடி­யதாமென அரசு கூறுகிறது.
ஆனால் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்கு அவ்­வாறு செல்ல முடியாது. படை முகாம்­கள் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வினர் மற்றும் தடுப்பு முகாம்கள் எங்­கு­ள்­ளது என இவர்­க­ளுக்கு தெரி­யாது.

தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக தக­வல்­களை பெற முடி­யாது. பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­படும் தமிழ் மக்கள் எங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்­பது எவ­ருக்கும் தெரி­யாது. உற­வி­னர்­க­ளுக்கும் தெரி­யாது. மனித உரிமை திணைக்­கள குழு­வி­ன­ருக்கும் தெரி­யாது.

வட­மா­காண அரச அதிபர் உட்­பட அதி­கா­ரி­களை அழைத்து யாழ்.கட்­டளைத் தள­பதி உதய பெரேரா, காணிகள் தொடர்­பாக உத்­தி­ர­வு­களை பிறப்­பிக்­கின்றார். அது மட்­டு­மல்­லாது கிரா­மிய விழிப்புக் குழுக்­களில் கட்­டா­ய­மாக படையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட வேண்­டு­மென உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே படை முகாம்­களில் தலை­மைத்­துவ பயிற்சி வழங்­கப்­பட்­டது. ஆனால் இன்று வடக்கில் க.பொ.த. உயர்­தர மாண­வர்­க­ளுக்கும் தலை­மைத்­துவப் பயிற்சி வழங்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் தென்­ப­கு­தியில் எங்­கா­வது உயர்­தர மாண­வர்­க­ளுக்கு தலை­மைத்­துவ பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­கின்றா?

வட மாகா­ணத்தின் பிரதி காவல்துறை மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவை ஜனா­தி­ப­தியே நிய­மித்தார்.
அவர் தன்­னிச்­சை­யாக ஆளு­ந­ரோடு கலந்­தா­லோ­சித்து உத்­த­ர­வு­களை பிறப்­பிக்­கின்றார். ஆனால் நீங்கள் கொண்­டு­வந்த, நீங்கள் ஏற்­றுக்­கொண்ட 13ஆவது திருத்­தத்தில் இவ்­வாறான பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­பவர் தொடர்­பாக முத­ல­மைச்­ச­ரோடு கலந்­தா­லோ­சிக்­கப்­பட வேண்­டு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­பி­ர­தாயம் வட­மா­கா­ண­சபை தொடர்பில் சிங்கள அரசு கடைப்­பி­டிப்­ப­தில்லை. வட­மா­கா­ண­ச­பைக்கு அதி­கா­ரங்­களும் வழங்­கு­வ­தில்லை. உள்ள அதி­காரங்­களும் பறிக்­கப்­ப­டு­கின்­றன. சுயா­தீ­ன­மாக மாகா­ண­ச­பைக்கு இயங்க இட­மில்லை. 13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தாது எதற்காக கோடிக்­க­ணக்­கான பணத்தை செல­வ­ழித்து வட­மா­கா­ண­சபை தேர்­தலை நடத்­தி­னீர். இதனால் எந்த மன்­னாங்­கட்­டியும் கிடைக்­க­வில்லை.

ஜெனிவா கூட்டத் தொட­ருக்கு முன்பு சிறீலங்காஅரச குழு­வொன்று தென்­னா­பி­ரிக்கா சென்­றது. அங்கு யுத்­தத்­திற்கு பின்னர் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அந்­நாட்டு பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட்­டது. ஆனால் இங்கு யுத்தம் முடிந்­து­விட்­டது இது­வ­ரையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை வழங்­க­வில்லை.

அமைச்சர் பீரிஸ் ஜெனி­வாவில் வடக்கில் சிவில் நிர்­வாகம், அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது எனக் கூறி­யுள்ளார். ஆனால் இங்கு அந்த வித­மான சிவில் நிர்­வாகம் கிடை­யாது. அனைத்தும் படை மய­மாகவே உள்­ளது.
தென்­னா­பி­ரிக்கா அல்ல ஐரோப்­பா­விற்கு போனாலும் சிறீலங்காஅர­சாங்கம் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வை வழங்­கப்­போ­வ­தில்லை என்­ப­துதான் உண்மை. அன்று சிறீலங்காவில் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாக ஐ.நா. சென்று முறை­யிட்­டவர் மகிந்தவும், அமைச்­சர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் ஆவார்கள். சிங்கள மக்கள் பாதிக்கப் படும்போது ஜெனிவா சென்று முறையிட்டனர். அதற்கு இவர்களே வழிகாட்டியவர்கள் ஆவார்கள்.

இன்று தேசிய இனமான தமிழ் மக்கள் தொடர்ந்து அழித்தொழிக்கப்படுகின்றனர். எனவேதான் ஜெனிவா செல்கின்றோம். அப்படிச் செல்லும்போது அதற்கு தேசத் துரோகி என்ற முத்திரை குத்தி இவ்வாறு ஜெனிவா செல்வோர் கைது செய்யப்பட வேண்டுமென சிங்களஅரசாங்கம் ஊடகங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுகின்றது.

அப்படியானால் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டபோது, ஜெனிவா சென்றதை என்னவென்று கூறுவது. யுத்தம் முடிந்த பின்னர் மனித உரிமைகளை பாதுகாத்து மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கியிருந்தால் ஜெனிவா பிரச்சினை வந்திருக்காது என்றார்.

Comments
Loading...