Designed by Iniyas LTD
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு கோருவது பொருத்தமற்றது!
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென கோரப்படுகின்ற அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டுமெனக் கோருவது பொருத்தமற்ற விடயம் என்று கூட்டமைப்பிடம் குறிப்பிட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டும், முறையற்ற தீர்ப்புக்களின் பிரகாரமும் நீண்டகாலமாக நபர்களை தடுத்து வைக்கமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள்
அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவேண்டுமெனக் கோரப்படவில்லை. நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதை மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அதனடிப்படையிலேயே சிறையில் உள்ளார்கள். ஜனநாயகத்திற்கு விரோதமான பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்குமாறு நாம் பல தடவைகள் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். தற்போது பங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது என்பதை நாம் ஆணையாளரிடத்தில் வலியுறுத்தியபோது அவ்விடயம் தொடர்பில் தனது தெளிவுபடுத்தலை செய்தார். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென கோரப்படுகின்ற அதேவேளை பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டுமெனக் கோருவது பொருத்தமற்ற விடயம். ஆனால் பயங்கரவாதச் தடுப்புச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், தவறான தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டுமென்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. ஆகவே அவர்களின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார்.
ஐ.நா.தீர்மானம்
ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் வழிமொழிந்தே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமானதொரு தீர்மானம். வெளித்தரப்பினரால் கொண்டுவரப்பட்டதொன்றல்ல. எனவே அத்தகையதொரு தீர்மானத்தில் ஒன்றை அமுல்படுத்த முடியும். பிறிதொன்றை அமுல்படுத்த முடியாதென பிரித்து இலங்கை அரசாங்கம் செயற்பட முடியாது. முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களையும் வெளியிட முடியாது எனக் கூறினோம்.
அதன்போது நாங்கள் குறிப்பிட்ட கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஆணையாளர் தாம் இதனை அரசாங்கத்திடம் திணிக்கவில்லை. அவர்களே சர்வதேச சமுகம், தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசி இணக்கப்பாட்டுடன் நிறை வேற்றப்பட்ட தீர்மானமொன்றாகும். ஆகவே அத்தகையதொரு தீர்மானத் தில் விலகி நிற்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமில்லை அதனை அரசாங்கத் திடம் எடுத்துரைப்பேன் எனக் குறிப் பிட்டார் என்றார்.