தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பில்லை: ஜி.கே.மணி

தமிழகத்தில் தற்போதைக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவாய்ப்பில்லை என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

சிவகாசியில் மதுக்கடை போராட்டத்தில் கைதாகி மதுரை  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிர்வாகி திலகபாமா உள்ளிட்டோரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுக்கடைகளை எதிர்த்து பெண்கள் தன்னெழுச்சியாக நடத்திவரும் போராட்டம் பாமகவுக்கு கிடைத்த வெற்றியாகும். சிவகாசியில் போராட்டத்தில் பங்கேற்ற பாமக நிர்வாகிகளை காவல்துறை தாக்கியது சரியல்ல.

பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளத்தை போல தமிழகத்தில் பூரண மதுவிலக்கை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்கும் வகையில் மதுக்கடைகளை அரசு மூடவேண்டியது அவசியம்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு சட்டப்பேரவைக்குத் தேர்தல் வர வாய்ப்பில்லை. தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள பாமக தயாராக உள்ளது. தேர்தல்களில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து அந்த நேரத்தில் முடிவெடுத்து பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...