Designed by Iniyas LTD
தலாக் விவகாரம்: மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம் சமூகத்து ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி தங்களது திருமண உறவை முறித்துக் கொள்ளும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கசப்பான திருமண உறவுகளின்போது விவாகரத்து கோருவதற்கு நீதிமன்றத்தை நாடுவது வழக்கம். நீதிமன்றத்தில் நிதானமாக சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதால் தம்பதியர் விவாகரத்து பெறுவதற்கு காலதாமதமாகும் நிலை உள்ளது. ஆனால் முஸ்லிம் மதத்தில் மூன்று முறை தலாக் என்று கூறினால்போதும். திருமண உறவில் இருந்து ஆண்கள் விடுபடுகின்றனர்.
இந்தப் பழங்கால முறையைப் பின்பற்றி விவாகரத்து பெற்றுக் கொள்வதால், முஸ்லிம் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும், இந்த முறைக்குத் தடை விதிக்கக் கோரியும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, தலாக் விவகாரம் குறித்தும், அதனால் முஸ்லிம் பெண்களின் பாதிப்பு குறித்தும் விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதிகள், 4 வார கால அவகாசம் வழங்கினர்.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் பிரதிநிதிகள் ஆஜராகினர். அப்போது அவர்கள் கூறுகையில், “சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தினரால் பின்பற்றப்படும் தனிச்சட்டங்களை திருத்தி எழுத முடியாது.
திருமணம், விவாகரத்து, பராமரிப்பு ஆகியவை தொடர்பாக முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வகுத்துள்ள விதிமுறைகள் எங்களது புனித நூலான திருக்குரானை அடிப்படையாகக் கொண்டவை’ என்று தெரிவித்திருந்தனர்.