Designed by Iniyas LTD
பிரிவினைவாதிகளுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
காஷ்மீரிய உணர்விலும், மனிதாபிமானத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை இல்லாததுபோல பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக்கட்சி குழுவினரைச் சந்தித்து பேச்சு நடத்த காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பினர் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி ஹிஸ்புஸ் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதைக் கண்டித்து அங்குள்ள இளைஞர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சுமார் 2 மாதங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் இதுவரை 71 பேர் உயிரிழந்து விட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ராஜ்நாத் சிங் தலைமையில் 26 எம்.பி.க்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழுவினர் இரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகர் சென்றடைந்தனர். அங்கு மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
இதனிடையே, அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களான சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயப்பிரகாஷ் நாராயண் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) ஆகியோர் தனியாகச் சென்று பிரிவினைவாதத் தலைவர்களைச் சந்திக்க முயற்சித்தனர். முதலில் அவர்கள் ஸ்ரீநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானியின் இல்லத்துக்குச் சென்றனர். எனினும், எம்.பி.க்களைச் சந்திக்க கிலானி மறுத்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து, ஹுமாமா பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜேகேஎல்எஃப் அமைப்பின் தலைவர் யாசீன் மாலிக்கைச் சந்திக்க இந்த எம்.பி.க்கள் சென்றனர். தாம் தில்லி வரும்போது அவர்களைச் சந்திப்பதாக அவர் கூறிவிட்டார்.
அதன் பின் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்டைச் சந்திக்க எம்.பி.க்கள் சென்றனர். அவர்களை அவர் வரவேற்றபோதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதுதவிர, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி.யான அஸôதுதீன் ஒவைஸி தனியாகச் சென்று, ஹுரியத் அமைப்பின் மிதவாதத் தலைவரான மீர்வாய்ஸ் உமர் ஃபரூக்கைச் சந்திக்க முயன்றார். அவரை உமர் ஃபரூக் வரவேற்றபோதிலும், பேச்சுவார்த்தை நடத்த மறுத்து விட்டார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முதல்வர் மெஹபூபா முஃப்தி விடுத்த அழைப்பையும் பிரிவினைவாதிகள் நிராகரித்தனர்