Designed by Iniyas LTD
தாயகத்திலும் இலங்கையிலும் களைகட்டிய பொங்கல் திருவிழா!
உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டியை சகல பாகங்களிலுமுள்ள மக்கள் இன்று (சனிக்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
குறிப்பாக மன்னாரில் இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, மன்னார் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று வவுனியா மாவட்டத்திலும், மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மிகவும் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியதாக தெரிவித்தார்.
அத்தோடு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கர வண்டி சாரதிகள் இணைந்து பொங்கல் பொங்கி கொண்டாடியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திலும் மக்கள் பொங்கல் பொங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் அறிவுச்சோலை இல்லத்தின் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், யாழிலும் சகல ஆலயங்களிலும் காலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி கொண்டாடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேபோன்று கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல பாகங்களிலும் இந்துக்கள் தைத்திருநாளை மிகவும் குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதேவேளை மலையகத்தில் குறிப்பாக ஹட்டன், கம்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

























