Designed by Iniyas LTD
தமிழர்கள் வாழ்வின் பொற்காலம்
விடுதலைப்புலிகளின் மிக நேர்த்தியான கட்டமைப்பில் பிரதேசத்திற்கு ஒரேயொரு பணிமனை. கிராமத்திற்கு ஓரிரண்டு தமிழீழக் காவற்றுறையினர். என நிர்வாகம் நடந்த காலப்பகுதியை யாரும் மறந்துவிட முடியாது.
எமது விடுதலை இயக்கத்தின் தலைமையால் போராளிகளுக்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மக்களும் தாங்களாகவே பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.
அதனாலேயே விடுதலைப் புலிகளின் நிர்வாகக் காலப்பகுதியில் குற்றச் செயல்கள், சமுதாயச் சீர்கேடுகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டிருந்தது.
ஈழத்தமிழர் வரலாற்றின் பொற்காலம்
வீதிகளில், கடைகளில், பள்ளிகளில், பொது மண்டபங்களில், கோயில்களில் என எங்கும் கண்காணிப்புக் ‘கமராக்கள்’ பொருத்தப் பட்டிருக்கவில்லை; நகைமாடங்களில் கூட காவலாளிகள் நிறுத்தப்படவில்லை; இரும்புச் சங்கிலிகளால் வாயிற்கதவுகள் பிணைக்கப் படவில்லை; வீட்டு வாசல் கதவுகளை யாரும் பூட்டி வைப்பதில்லை.
முற்றத்தில் பாய்போட்டமர்ந்து அப்படியே அங்கேயே விடியும்வரை படுத்துறங்கி எழும்பும் அச்சமற்ற உணர்வுடன் வாழ்வை மக்கள் வாழ்ந்தனர்.
மக்கள் அனைவரும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் நடத்தப்பட்டனர். நாளடைவில் மக்கள் தங்களுக்குள்ளும் அதனை வளர்த்துவந்தனர்.
மிக நல்லொழுக்கத்துடன் வீட்டையும் நாட்டையும் நேசிக்கக்கூடிய மாணவ இளையோர் சமுதாயம் அங்கே வளரத் தொடங்கியிருந்தது.
வீதியில் படுத்திருக்கும் நாயும், ஆங்காங்கே உலவித்திரியும் ஆடு மாடு கோழி கூட பாதுகாப்பை உணர்ந்த தருணங்கள் அவை.
மக்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிணக்குகள் தொடக்கம் பெரும் சச்சரவுகள் வரை வழக்குப் பதிவுகளின்றியே சாதாரண தமிழீழக் காவற்றுறை உறுப்பினர்களாலேயே மிக இலகுவாகத் தீர்த்துவைக்கப் பட்டிருந்தது.
பாதைமாறி, திசைமாறிப் பயணித்துக் கொண்டிருந்த ஈழத்தமிழினத்தை இழுத்துநிறுத்தி தன்மானத் தமிழர்களாய்த் தலைநிமிரச் செய்ததில் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றியும் அடைந்திருந்தது.
விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் தங்களைப் பெருமையாக நினைத்து வாழ்ந்த காலம். அது, ஈழத்தமிழர் வரலாற்றின் பொற்காலம்.
அப்படி இருந்த மக்கள்தான் இன்று சமூக சீர்கேடுகளும், வாள்வெட்டு குழுக்களின் பிடியிலும் சிக்கித்தவிக்கின்றனர். தமிழர்களிற்கு அப்படி என்ன ஒரு சாபக்கேடு?
உணர்ந்துகொள்ளுமா நம் சமூகம். காட்டிக்கொடுக்கும் எட்டப்பன் கூட்டத்தினாலும் திட்டமிட்ட சமூக சீர்கேடுகளாலும் பாழாய்போய்விட்டது நம் தேசம்.
வருங்கால சந்ததிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டிய இளையோர்கள், எப்படியெல்லாம் இருகின்றார்கள். இதற்காக வெட்கப்படவேண்டுமா அல்லது வேதனை படவேண்டுமா?
என்றாவது ஒரு நாள் இதனை உணரும்போது காலம் கடந்துபோய்விட்டிருக்கும். ஒரு நிமிடம் சிந்தியுங்கள்…
காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.
