Designed by Iniyas LTD
திட்டமிட்ட உத்தி புலிப்பார்வை …………….

புலிப்பார்வை என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் எந்தவித முற்போக்குத்தனமான அரசியல் மனிதாபிமான பார்வையுமின்றி ஈழப் போராட்டத்தைசந்தைப்பொருளாக்கி முற்று முழுதாக இலகுவான வியாபார நோக்கம் மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது ,
ஆழமான அரசியல் அறிவில்லாத ஈழ ஆதரவுக் குணங்கொண்ட வெகுஜனக்கூட்டத்தை இலகுவாக தம்வசப்படுத்தி, அவர்களது மிகப்பெரிய எழுச்சி உணர்வுகளை பலவீனமாக மாற்றஞ்செய்து பணம் பண்ணுவதற்கு செய்யப்பட்ட திட்டமிட்ட உத்தி புலிப்பார்வை என்ற பெயரும் விடுதலைப்புலிகளின் ஓரளவு ஒத்த சீருடைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட திரைப்படம்..
தமிழ்நாட்டிலுள்ள அப்பழுக்கற்ற உண்மையான ஈழத்தின் அனுதாப உணர்வுகளை குறிவைத்து லாபம் பார்க்கலாம் என்ற சுயநல நோக்கமும் ஈழப் போராட்டத்திற்கு சேறடித்து கறை பூசும் விதமான உரு மறைக்கப்பட்ட அரசியலும் கலந்து திட்டமிடப்பட்ட ஒரு தயாரிப்பு புலிப்பார்வை.
இப்படியான மலினமான தந்தரங்கள் ஈழப்பிரச்சினை முனைப்புப் பெற்று தலைவர் பிரபாகரன் அவர்களுடைய ஒப்புக்கூற முடியாத உறுதியான நிலை வெளியில் தெரியத்தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளின் தன்முனைப்பு ஆதரவு என்ற தந்தர சதியுடன் உள்நுழைந்து இன்றுவரை தவிர்க்கமுடியாத சங்கடமாக தொடர்ந்தே வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் கருணாநிதி போன்ற இனங்காணப்பட்ட பிரபலமான அரசியல்வாதிகளால் தொடங்கப்பட்ட இந்ததந்திரம் இன்று சினிமா கூத்தாடிகள், ஆளில்லாத அரசியற் கட்சிகள், சிரிப்பு நடிகர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அனைவரதும் முதலீடாக ஈழப்போராட்டம் இருந்து வருகிறது.
ஒருவகையில் குறிப்பிட்டவர்களின் குடும்பத்தாரின் வயிற்றுப்பிழைப்பு ஈழப்போராட்டத்திம் மூலம் ஈடேறுகின்றது என்ற இழிவான முன்னேற்ற நிலையிருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாத செயற்பாடுகளும் தொடர்ந்தே வருகின்றன.
கண்டனங்கள் எதிர்ப்பு அறிக்கைகள், செய்திகள் மூலம் தமிழ்நாட்டின் உயர்குடிகளாக பிம்பம் கட்டி வாழும் சினிமா பிரம்மாக்களை, சிதம்பிப்போய்க்கிடக்கும் அரசியல் வஞ்சகங்களை திருத்திவிடலாம் என்றோ கண்டனங்கள் மூலம் திருப்பத்தை கொண்டுவரலாம் என்றோ நினைப்பது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு பச்சோந்தியை சீண்டப்போய் இன்னொரு பச்சோந்தி பிறப்பெடுக்க வழிதேடியதாகவே வரலாற்றுப்பாதை எமது கண்முன் விரிந்து கிடக்கிறது.
திடமாக களத்தில் இறங்கி நிறுத்தக்கூடிய பொறி ஒன்று இல்லாமல் கண்டனங்களும் வேண்டுகோள்களும் குறிப்பிட்ட புலிப்பார்வை என்கிற திரைப்படம் இன்னும் கூடுதலான ரசிகர்களை திரையரங்குகளுக்கு வர வைப்பதற்கான விளம்பரமாக அமையுமேதவிர காரியம் எதுவும் ஆகப்போவதில்லை.
உண்மையான உணர்வுள்ள மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழும் நேரங்களில் தம்மை பலப்படுத்திக்கொள்வதற்காக அல்லது கும்பலோடு சேர்ந்து கோவிந்தா போட்டு தப்பித்துக் கொள்வதற்காக சந்தற்பவாத மேடைகள் அமைத்து கழுத்து நரம்பு புடைக்க முழங்கி ஏமாற்றிய பல சினிமா பிரபலங்கள் பலர் இன்று தமது வியாபாரத்துக்காக ஈழப்போராட்டத்தை மாற்றஞ்செய்ய முயன்று வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் உணவின்றி குடிக்க நீரின்றி பதுங்கு குழிக்குள் பலநாட்கள் பட்டினி கிடந்து போர் நிறுத்தம் நிகழ்த்தப்பட்டதாக அப்போ முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் பிரகடனப்படுத்ப்பட்ட பொய் பிரகடனத்தால் இறந்த பெண்கள், குழந்தைகள், மற்றும் திறந்த மருத்துவ வெளிகளில் கொல்லப்பட்ட நோயாளிகளின் வீடியோ ஆதாரங்களை மனதில் இருத்தி அடுத்த செயற்பாடுகளை செய்யும்படி தாழ்மையாகவும் மனிதாபிமானத்துடனும் குறிப்பிட்டவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.
கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட போராளி என்று சித்தரிக்கப்பட்ட இளைஞனின் உடல், வயிறு கிழிந்து குடல் வெளிவந்து கையில் பிடித்தபடி கிடக்கும் வயோதிபரின் உடல், சுக்குநூறாக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் உடல்கள், உயிருடன் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அப்பாவி இசைப்பிரியாவின் உருக்குலைந்த உடல், ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தையான பாலச்சந்திரனின் படுகொலை இவைகளை நேரடியாக பார்த்து அனுபவித்த உணர்வு தமிழகத்து அரசியல் சினிமா பிரமாக்களுக்கு இல்லையென்றாலும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வெப்பம்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தலைவர் சொன்னதுபோல அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் நாங்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலே அரைவாசி தரித்திரம் குறைந்துவிடும் என்றதுபோல,புலிப்பார்வை என்ற திரைப்படத்தை தமிழ்நாட்டு அரசியல் சினிமா பிரமாக்கள் எதிர்ப்பார்கள் என்பதை விட்டு விட்டு எமது களங்களில் இப்படியான வரலாற்றுத் துரோகங்களை நுழையவிடாமல் பார்ப்பதே சரியான பதிலடியாக இருக்கும்.
மாவீரர் நினைவு காலங்களில் துரோகிகளின் ஏற்ப்பாட்டில் கானம்பாட வேஷம்போட்டுவந்த இசைஞானியை கனடாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த எம்மால் முடிந்திருக்கிறது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த ஶ்ரீலங்காவின் நிறைவேற்று சனாதிபதி ராஜபக்ஷவை விரட்டியடிக்க லண்டன் தமிழர்களால் முடிந்திருக்கிறது,
இந்திய இலங்கை கூட்டுச் சதியால் கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பாலகன் பாலச்சந்திரனை இழிவுசெய்யும் பச்சோந்தித் தனமான புலிப்பார்வை என்ற திரைப் படத்தை போராட்டம் செய்து தடுக்க வேண்டாம் தெருவுக்கு வரவேண்டாம் புலம்பெயர் தேசங்களில் நாம் பார்க்கப்போவதில்லை என்று ஏன் உறுதி கொள்ளக்கூடாது? அந்தப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிடாமல் தடுக்க ஏன் நாம் போராடக்கூடாது. புலம்பெயர் தேசங்களில் வீச்சாக அதற்கான ஆரம்பம் தொடருமென்றால் தமிழ்நாட்டில் அடிமட்ட ரசிகன் சிந்திப்பான், தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான உண்மையான உணர்வாளன் விடயத்தை புரிந்து கொள்வான் வருங்காலங்களில் பச்சோந்திகள் இப்படியான திட்டமிட்ட தயாரிப்புக்களை தாமாக கைவிட நேரும்.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும்
குடியுயர கோலுயரும்
கொலுயர கோனுயர்வான்.
முதலில் வரப்பை உயர்த்திக் கட்டவேண்டிய வேலை நம்முடையதே.