Designed by Iniyas LTD
திருமலை – யாழ்ப்பாண மீள் குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்தவர்களுள் சுமார் 2 ஆயிரத்து 175 பேரை மீள்குடியமர்த்துவதற்காக 160 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் தமது ஆரம்ப இருப்பிடங்களில் மீள் குடியமர்த்துவதே அரசின் கொள்கையாகும். இந்த நோக்கத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட இடம்பெயர்ந்த 2,175 குடும் பங்களை மீள்குடியமர்த்துவதற்காக வேண்டி தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கும் நோக்கில் 160 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்காக மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பொறுப்புடனும், கணக்குக் கூறக்கூடிய விதத்திலும் அவற்றின் சேவைகளையும், உள்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு அரசால் வடக்கு, கிழக்கு உள்நாட்டுச் சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதிருக்கும் கருத்திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 65 பிரதேச சபைகள், 12 நகர சபைகள் மற்றும் 3 மாநகர சபைகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
இவ்வேலைத்திட்டத்தின் மேலதிக வேலைகளைச் செய்து முடிப்பதற்காக – நிதியிடல் இடைவெளியை மூடுவதற்காக இலங்கை அரசின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்குறிப்பிட்ட கருத்திட்டத்தை தொடர்வதற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான தொகையயான்றை விசேட கடன் எடுப்பு உரிமையாகப் பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்வால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.