தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தொடரும் முன்னாள் போராளிகள் மரணம்! சர்வதேச விசாரணையே தீர்வு!!

tamilini-8ddd

மற்றுமொரு முன்னாள் போராளி மர்மமாக மரணமடைந்துள்ள செய்தி தாயக மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தில் உறுப்பினராக இருந்த வவுனியா பனிக்க நீராவி புளியங்குளத்தை சேர்ந்த அமலதாஸ்என்ற முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அமலதாஸின் மரணமும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது.

உறவினர் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிய அமலதாஸ் ஓவ்வெடுக்கச் சென்ற சமயம் திடீரென மயக்கமுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார். மயக்கமடைந்துள்ளதாக நினைத்த குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு அவரை எடுத்துச் சென்றுள்ளனர். இதுவரையில் எந்த உடல் நோயுமற்ற நிலையில் வாழ்ந்ததாகவும் விச ஊசி ஏற்றப்பட்டமையே மரணத்திற்குக் காரணம் என சந்தேகிப்பதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதுவரையில் பல முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளீர் பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவகாமி புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டு சில வருடங்களில் புற்றுநோய்காரணமாக இறந்தார். இவரின் மரணம் இடம்பெற்று அடுத்தடுத்த நாட்களில் புதுக்குடியிருப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் திடீர் மயக்கமுற்ற நிலையில் சாவடைந்தார்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியை சேர்ந்த சிவகௌரி என்ற முன்னாள் போராளியும் புற்றுநோயினால் இறந்தார். அத்துடன் மாந்தை கிழக்கு பாண்டியன் குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் டிகுணதாசன் என்ற முன்னாள் போராளியும் புற்றுநோயினால் மரணமடைந்தார். டிகுணதாசனின் குடும்பத்தினர் அவரது மரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்ததுடன் அவரது மரணம் தொடர்பான மர்மத்தையும் வெளிப்படுத்த மறுத்த சூழ்நிலை புரிந்துகொள்ளத் தக்கது.

முன்னாள் போராளிகள் பலர் புற்றுநோய், சிறுநீரகச்செயலிழப்பு, தோல் நோய்கள், அறியப்படாத மர்ம நோய்கள் போன்றவற்றால் உயிரிழிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வடகிழக்கில் மாத்திரமின்றி தமிழ்நாடு, புலம்பெயர் தேசம் முதலிய நாடுகளுக்கு தப்பிச் சென்ற பின்னரும் இந்த மரணங்கள் தொடர்கின்றன. அத்துடன் போராளிகள்மீது உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பல போராளிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை முல்லைத்தீவில் நல்லிணக்க பொறிமுறை குறித்த ஸ்ரீலங்கா அரசின் செயலணியின் முன்பாக கருத்து தெரிவித்த முன்னாள் போராளி ஒருவர் தமக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவித்த கருத்து பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. போராளியாக இருந்த காலத்தில் தன்னுடைய உடல் இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் பாரிய வேறுபாடு காணப்படுவதாகவும் கூறிய அவர் தமக்கு விச ஊசி ஏற்றப்பட்டமையே இந்த கடல் மாற்றத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் வழமை போல மறுத்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின் தொடர் மரணத்தை தடுத்து நிறுத்துவது யார் என்ற கேள்விதான் இப்போது பலரையும் உலுக்குகிறது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் மருத்து பரிசோதனை செய்ய அழைப்பு விடுவிக்கப்பட்டு போராளிகள் பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே மற்றுமொரு முன்னாள் போராளியும் சாவடைந்திருப்பது இந்த விடயத்தில் மீண்டும் கவனத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

சிங்கள அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். திட்டமிட்ட இன அழிப்பு மூலம் ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்ட நினைக்கும் சிங்களப் பேரினவாதம் இன்னமும் தனது இலக்கில் தெளிவாகவே இருக்கிறது. போருக்குப் பின்னரும் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இதற்கான ஆதாரங்கள் பல கண்டறியப்பட்டன. எனவே தடுப்பு முகாங்களில் தமிழ் போராளிகளுக்கு சிங்கள அரசு என்ன செய்தது என்பதை விரைவாக அறிந்து கொள்ளும் வகையில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவது அவசியமானது. அத்தகைய விசாரணையின் ஊடாகப் பெறப்படும் தீர்வே முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்களை தடுத்து அவர்களை காப்பாற்ற உதவும் என்பதை செண்பகம் தமிழர் குரலாக வலியுறுத்துகிறது.

ஆசிரியர்.
செண்பகம்.
03.11.2016

Comments
Loading...