Designed by Iniyas LTD
தி.மு.க. மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் வைகோ – ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவரிடம், ‘தே.மு.தி.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தி.மு.க. தான் காரணம் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளாரே?’, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து கூறியதாவது:- தே.மு.தி.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். தேவை இல்லாமல் வைகோ, தி.மு.க. மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
தி.மு.க.வில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது? என்பது குறித்து நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடக்கிறது. மாலை மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இன்னும் 2 அல்லது 3 தினங்களில் எந்தந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவிப்பார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத்தலைவர் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் 5 தொகுதிகள் என்னென்ன? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை குறித்து காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். தி.மு.க. கூட்டணி கருணாநிதி தலைமையில் அமோக வெற்றி பெறும்’’, என்றார்.