தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேமுதிக, ம ந கூ, தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் – வைகோ

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என அதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். மதுரையில் நிரூபர்களை சந்தித்த வைகோ, சட்டப் பேரவைத் தேர்தலில் அமைந்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என தெரிவித்துள்ளார்.vaiko

மேலும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் எனவும், வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய வேட்பாளர்களை 6 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டைதொகுதியில் டெபாசிட் இழந்தார். இந்த கூட்டணியில் திருமாவளவன் உட்பட ஒரு சில வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கில் வைப்புத் தொகையை தக்க வைத்தனர். மதிமுக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் வைப்புத் தொகை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் தமாகா போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வைப்புத் தொகையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...