Designed by Iniyas LTD
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்பட வேண்டும் – மாவை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு வலியுறுத்தினார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வீடில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் மாத்திரம் இரண்டு இலட்சத்து 16 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மையப்படுத்தி இந்திய அரசால் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவற்றில் 40 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், எமது மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இன்றும் பலர் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலுமே தங்கியுள்ளனர்.
அந்த வகையில் தென்னிந்தியாவில் 111 முகாம்களில் ஒரு இலட்சத்து 68 ஆயிரம் பேர் அகதிகளாக இருந்து வருகின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள வரவேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் காணிகளை திரும்பப்பெற முடியாத சூழ்நிலை இருக்கின்றது.
ஆகவே, மீள்குடியேற்றம், காணிமீட்பு, வீட்டுநிர்மாணம் ஆகிய விடயங்களில் இணைந்த குழுவாக செயற்படுதல் முக்கியமாகின்றது.
அதேவேளை, கூட்டு ஒப்பந்தப் பேச்சு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேச்சு முடிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அவர்களின் வீடில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.