Designed by Iniyas LTD
நம்பிக்கையின் நாயகர்களாக தமிழ் மக்களை நான் பார்க்கின்றேன் – கருஜெயசூரிய
நம்பிக்கையின் நாயகர்களாக தமிழ் மக்களை நான் பார்க்கின்றேன். அந்த வகையில் நாங்கள் பல்வேறு நல்லிணக்க செயற்றிட்டங்களைத் தமிழ் மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார். சபாநாயகர் கருஜெயசூரிய தனது 76ஆவது பிறந்த தினத்தினை நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நல்லிணக்க செயற்றிட்டங்களுக்காக அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் பல்வேறு புரிந்துணர்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறான நல்லிணக்கப் புரிந்துணர்வுகள் மிக விரைவில் வெற்றியளிக்கும் என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன், விளையாட்டுத் துறை அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், வடமாகாண சபை உறுப்பினர் அகிலதாஸ் எனப் பலரும் கலந்துகொண்டு சபாநாயகருக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். தனது பிறந்த தினத்தினை கொண்டாடிய பின் தனது பிறந்த நாள் பதிவுகளை வடமாகாண ஆளுநரின் பதிவீட்டில் சபாநாயகர் கரு ஜெயசூரிய குறித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது