தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நல்லாட்சி என்பது பெயரளவில் தான் – பிரசன்னா இந்திரகுமார்

நல்லாட்சி என்று கூறிக் கொள்ளும் அரசாங்கத்தின் செயற்பாடு பெயரளவில் தான் உள்ளது. அதற்கு சான்றாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கொழும்பு நான்காம் மாடி புலனாய்வு பிரிவினரினால் அண்மையில் அழைக்கப்பட்டு விசாரனைக்குட்படுத்தப்பட்டுள்ளார் இவ் நடவடிக்கையானது எம்மை அவமதிக்கின்ற செயலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.inthi

மட்டக்களப்பு மேற்கு மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தின் மாடிக்கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் போ.நேசதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது. இதுதான் நல்லாட்சியா. தமிழனை அழிக்க பயன்படுத்திய கொஸ்கம ஆயுத களஞ்சிய சாலை அண்மையில் வெடித்து சிதறியமையினை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் மூலம் அருகில் இருந்த வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான கொடுப்பனவு முதற்கட்டமாக ரூபா 50 ஆயிரம் வழங்க அரசு தீர்மானித்து அதனை வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை விடுவித்து அவற்றினை உரியவர்களிடம் வழங்கி அவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவதில் அதிக அக்கறை செலுத்தாமல் உள்ளது. இதேவேளை ஜெனிவா மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர மேற்படி காணி விடயங்கள் தொடர்பாக 2018 இற்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் ஏன் இவ்வளவு நீண்ட காலம் எடுக்க வேண்டும். எமது மக்களின் காணிகளை வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளது.! இதே போன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஓற்றுமையாக இணைந்து நல்லாட்சி செய்வதாக கூறிக்கொள்கிறோம். அது உதட்டளவில் மட்டுமேதான் உள்ளது.

அதற்கு சான்றாக கிழக்கு மாகாண சபையினால் தமிழ் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படும் அவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு விடயங்களில் விகிதாசாரம் பேணப்பாடமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாகாண சபை ஆட்சியில் அப்போது இருந்த ஆளுனர் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் புறக்கணித்து செயற்பட்டார். இதற்கு சான்றாக முகாமைத்துவ உதவியாளர் பதவி மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் போன்ற பதவிகள் கிழக்கு மாகாண சபை ஊடாகவே புறக்கணிப்பு செய்யப்பட்டமையானது வரலாறாகும்.

இன்றைய மாகாண சபை ஆட்சியிலே ஆளுனர் மற்றும் முதலமைச்சரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை ஊடகம் ஊடாக வெளியிடுவதனை விடுத்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் அதனை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வ சிந்தனைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும். கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்குரிய அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கள் மற்றும் ஏனைய அமைச்சுக்கள் எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான திட்டங்களை தயாரித்து செயல்படுத்த முன்வரவேண்டும் என்றார்.

Comments
Loading...