தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நவீன உலகில் ‘செவிலியர் தினம்’

நவீன உலகில் ‘செவிலியர் தினம்’ எனும்போது, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் சமூகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய பிரிவினர் தொடர்பான நினைவூட்டல் தினமாகவே இது அமைகிறது.‘மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய்-சேய் மரண சதவிகிதம் அதிகமாகும். இந்த தாய்-சேய் மரண சதவிகிதத்தைக் கட்டுப்படுத்த, மூன்றாம் உலக நாடுகள் கூடிய அனுசரணையை செலுத்த வேண்டும்’ என கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா. சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.அதே நேரத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மாலத் தீவு, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் போன்ற சார்க் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அனுசரணையைக் காட்டி வருவதால், சமீபகாலமாக இங்கு தாய்-சேய் மரண சதவிகிதம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இச்செயலாக்கத் திட்டத்துக்கு பல்வேறு சுகாதார அமைப்புகளும், நிறுவனங்களும் பங்களித்தாலும், இதை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வதில் ‘செவிலியர்’ எனும் குடும்பநல உத்யோகஸ்தர்களின் பங்களிப்பே முதன்மை பெறுகிறது. ஒரு பெண் கர்ப்பம் அடைவதிலிருந்து சிசுவைப் பிரசவித்து, சுமார் ஐந்து வயது அடையும் வரை இந்த குடும்பநல உத்யோகஸ்தர்களான செவிலியர்களின் நேரடி பராமரிப்பும், ஆலோசனைகளும் விசாலமானவை.மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமே செவிலியர்களின் சேவை என மட்டுப்படுத்த முடியாது. பொதுவாக, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் செவிலியர்களின் பணி உயரியதாகவே கருதப்படுகிறது.

இந்த அடிப்படையில், 1987ம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் மாநாட்டில் உலகளவில் செவிலியர் தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, 1991-ம் ஆண்டு, மே மாதம் 12ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றி வருகின்றன.

செவிலியர் தினம் உருவான வரலாறு:

இங்கிலாந்தில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியருக்கு, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் 12.5.1820ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

கடந்த 1854-56ம் ஆண்டு ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரீமியனில் நடைபெற்ற போரில் ஏராளமான வீரர்கள் காயம்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.

அவர்களுக்கு நைட்டிங்கேல் குழுவினர் இடையறாது மருத்துவ சிகிச்சை அளித்தும், ஆறுதல் மொழி பேசியும் குணப்படுத்தி வந்தனர். இரவு நேரங்களில் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு, நைட்டிங்கேல் கையில் மெழுகு விளக்கை ஏந்தியபடி நலம் விசாரித்து, அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, அவர்களின் மனச்சுமையை போக்கியதுடன், விரைந்து குணப்படுத்தினார்.

இதை கண்ட ராணுவ வீரர்கள், ‘தங்களைக் காக்க விண்ணுலகில் இருந்து தேவதையொன்று மண்ணுலகுக்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர். போருக்குப் பின் நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேலை, விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக அறியப்பட்டவராக பி.பி.சி. ஒலிபரப்பு அறிவித்தது.இதைத் தொடர்ந்து, 1883ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு, விக்டோரிய மகாராணி செஞ்சிலுவை சங்க விருதை வழங்கினார்.nures

1907ம் ஆண்டு பிரிட்டானிய மன்னரின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விளங்கினார்.அவரது நினைவாகவே, ஆண்டுதோறும் நைட்டிங்கேல் பிறந்த மே 12ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் உள்ள விளக்குகள் அங்குள்ள செவிலியர்களால் ஏற்றப்பட்டு, அங்குள்ள உயர்ந்த பீடத்தில் அவர்கள் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க செவிலியர் பணி, ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவது இல்லை. அது செவிலியர் ஒவ்வொருவரின் மனதுக்கும் திருப்தி அளிக்கக்கூடிய மனிதநேய சேவை.‘ஆண்டவனை எங்கே என்று பலர் தேடுகிறார்கள். வறியவர்களும் நோயுற்றவர்களும் துன்பப்படுகிறவர்களும் தாதியரால் ஆறுதல் அடையும்போது, தாதியரின் முகத்தில் தவழும் புன்னகையிலேயே இறைவன் இருக்கிறார்’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.

அவரது கூற்றுப்படி, பிணி காலத்தில் நம்மை கண்மணி போல் காக்கின்ற, போர் மற்றும் இயற்கை சீற்ற காலங்களில் தனது உயிரை துச்சமென மதித்து, மற்றவர்களை காப்பாற்ற முன்னேறும் செவிலியர்களை கடவுளின் தூதர்களாக நாம் அனைவரும் போற்றி வணங்குவோம்.

Comments
Loading...