தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாங்கள் தீர்மானத்தை எதிர்த்தால் தமிழர்பிரச்சினையை சர்வதேசம்இலகுவாக கைகழுவி விடும்! – சம்பந்தன் .

download (1)
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டு வரப்படுகின்ற சிறீலங்கா தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை என்கின்ற சொற்பதம் அந்தப் பிரேரணையின் முன்வரைவில் இல்லை என்பதற்காக, அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது. ஜெனீவா பிரேரணையின் முன்வரைவில் அடங்கியுள்ள விசாரணை கோரிக்கைகள் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதை நோக்காகக் கொண்டது. அந்த நோக்கத்தை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

அதேநேரம், தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வு, வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்டல் போன்ற விடயங்களை எட்டக்கூடிய விதத்தில் இந்தத் தீர்மானத்தில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும். சிறீலங்காவில் உள்ளக விசாரணை நடைபெறவேண்டும் என்றும் அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, ‘மனித உரிமைகள் உயர் ஆணையர் தனியான விசாரணை நடத்தவேண்டும்’ என்று தீர்மானத்தின் முன்வரைவு கூறுகின்றது.

ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நடத்துகின்ற விசாரணை, சர்வதேச விசாரணையாகவே இருக்க முடியும். சர்வதேச விசாரணை என்ற சொற்பதம் இல்லை என்பதற்காக அதனை நாங்கள் எதிர்க்க முடியாது.மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் மிகவும் நிதானமாக- அவதானமாக-பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருக்கிறது.

அமெரிக்கத் தீர்மானத்தை சிறீலங்கா அரசாங்கம் எதிர்க்கிறது, நாங்களும் அதனை எதிர்த்தால் சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையை இலகுவாக கைகழுவி விட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது என்று கூறினார் இரா. சம்பந்தன்.

Comments
Loading...