தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாளை ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3–வது கால் இறுதி ஆட்டம் அடிலெய்டுவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா– ‘பி’ பிரிவில் 3–வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.pakisthan

போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா 7–வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. 4 முறை சாம்பியனான அந்த அணி ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மட்டுமே தோற்றது. பரபரப்பான அந்த போட்டியில் 1 விக்கெட்டில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி இருந்தது. வங்காள தேசத்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் ஆஸ்திரேலியா அபாரமாக திகழ்கிறது. வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், கேப்டன் கிளார்க், வாட்சன் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும், ஸ்டார்க், ஜான்சன், கும்மின்ஸ் போன்ற அபாயகரமான பவுலர்களும் உள்ளனர்.

இந்த தொடரில் ஸ்டார்க் மிகவும் நேர்த்தியாக பந்துவீசி வருகிறார். 16 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கும் அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் பலவீனமாகவே காணப்படுகிறது. பந்து வீச்சையே அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. அதுவும் முன்னணி வேகப்பந்து வீரரான முகமது இர்பான் காயத்தால் விலகியது பாதிப்பே.

முதல் 2 ஆட்டங்களில் இந்தியா, வெஸ்ட் இண்டீசிடம் மோசமாக தோற்ற பாகிஸ்தான் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் (ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து) வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றிகளுக்கு பந்துவீச்சே காரணமாக இருந்தது. வகாப்ரியாஸ், சோகைல்கான், ரசத்அலி போன்ற திறமை வாய்ந்த வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். முதன்மையான சுழற்பந்து வீரர் இல்லை. அப்ரிடியின் பந்துவீச்சு எடுபடவில்லை. பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா ஒருவரே நிலையாக விளையாடுகிறார். விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது, கமரன் அக்மல், ஷேசாத், ஹாரிஸ் சோகைல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழைவது பாகிஸ்தானுக்கு கடும் சவாலானது. மிகவும் நல்ல நிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரிடை யாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:–

ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித், வாட்சன், மேக்ஸ்வெல், பல்க்னெர், ஹாடின், ஜான்சன், ஸ்டார்க், கும்மின்ஸ், பெய்லி, டோகர்ட்டி, ஹாசல்வுட், மிச்செல் மார்ஷ்.

பாகிஸ்தான்: மிஸ்பா– உல்–ஹக் (கேப்டன்), சேஷாத், சர்பிராஸ் அகமது, ஹாரிஸ், சோகைல், யூனுஸ்கான், கமரன் அக்மல், அப்ரிடி, வகாப் ரியாஸ், சோகைல் கான், ரசத் அலி, ஆதில், ஜாம்ஷெட், யாசிர்ஷா, சோயிப் மசூத்.

Comments
Loading...