Designed by Iniyas LTD
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் மீண்டும் மகாபாரதப் போர் தொடங்கும் – ஜெய்ராம் ரமேஷ்
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் மீண்டும் மகாபாரதப் போர் தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போரில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கட்சிகளுடன் காங்கிரஸ் தொடர்பில் உள்ளதாகக் கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுவதைத் தடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், விவசாயிகளின் நலன் கருதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பிஜூ ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்க்க முன்வர வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவ சேனா, அகாலி தள் உள்ளிட்ட கட்சிகளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எதிர்ப்பதாகக் கூறிய ஜெய்ராம் ரமேஷ், தேர்தலின்போது, பெரு நிறுவனங்கள் செய்த முதலீட்டிற்கு பிரதிபலனாகவே இந்த சட்டத்தை நிறைவேற்ற நரேந்திர மோடி விரும்புவதாகவும் குற்றம் சாட்டினார்.