Designed by Iniyas LTD
பயங்கரவாதிகள் தமிழக கடல் வழியாக இலங்கைக்குள் செல்லவில்லை – ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள்
இலங்கைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தமிழக கடல் வழியாக இலங்கைக்குள் செல்லவில்லை என, இந்திய கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழக கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தமிழக கடல் பகுதி வழியாக தப்பிவிடாமல் இருக்கவும், தமிழகத்தில் புகுந்து விடாமல் இருக்கவும் தீவிரமாக அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் 4 கப்பல்களில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,
கடலோர பாதுகாப்பு போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடல் பகுதியின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள் நேற்று ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளுக்குச் சென்றுள்ளார்.
இதன்போது தமிழக கடல் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இல்லை என்றும், இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் தமிழக கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.