Designed by Iniyas LTD
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்குவது தொடர்பில் முப்படைகளுடன் பேச்சு!
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு அரசு தயாராகிவருகின்றது.
இது தொடர்பில் முப்படைத் தளபதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புத்துறைசார் நிபுணர்களுடன் பேச்சு நடத்தி ஆலோசனைகளைப் பெறவுள்ளது.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முப்படைத் தளபதிகளுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும், இதற்காக விசேட பாதுகாப்புச் சபைக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது.
ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர உறுதிப்படுத்தினார்.
ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தைப் பற்றி ஆராயும் நோக்கிலா இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது என்பதுபற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
மேற்குலக நாடுகளில் நடைமுறையிலுள்ள பாயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தில் தீவிரவாத ஒழிப்பு, சைபர் குற்றம் (இணைய குற்றங்கள்), பொருளாதாரம்சார் அச்சுறுத்தல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனை மையப்படுத்தியே இலங்கையின் புதிய சட்டமும் அமையவுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் இலங்கையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் வகையிலேயே தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதியதொரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசு உச்தேசித்துள்ளது.
இலங்கையில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னர், அதிலுள்ள முக்கிய சரத்துகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குள் புகுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.