Designed by Iniyas LTD
பாலியல் துர்நடத்தைக்காக 30கனேடிய இராணுவ வீரர்களுக்கு தண்டனை!
கனேடிய படைவீரர்கள் சம்பந்தமான பாலியல் துர்நடத்தைச் (sexual misconduct) சம்பவங்கள், முறைப்பாடு செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, அவற்றை விசாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது எனக் கனேடிய இராணுவ உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
படைவீரர்களின் பாலியல் துர்நடத்தைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெற்றி அளிப்பது என்பது தொலைவில் இருக்கும் ஒரு எட்டாத இலக்காகும் என்பதை இராணுவ உயர் அதிகாரிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட முந்நாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கருத்துப்படி, கனேடிய இராணுவத்தில் பாலியல் கலாச்சாரம் வெளிப்படையாகத் தெரியாதவாறு மறைந்துள்ளது. இதை வேரறுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (Chief of defence staff) Gen. Jonathan Vance செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
குற்றவியல் விசாரணை தேவைப்படும் 106 பாலியல் துர்நடத்தை தொடர்பான சம்பவங்கள், இவ்வருடத்தின் முதல் ஆறு மாதகாலப் பகுதிக்குள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற 174 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் 22 % அதிகரிப்பைக் காட்டுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாலியல் தாக்குதல்கள் (sexual assault) தொடர்பானவை ஆகும்.
ஆயினும் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்டவை , தண்டனை பெற்றவை ஆகியவற்றின் எண்ணிக்கை போன்றவற்றை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை.