தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு ததேகூ இணக்கம்

பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கையை ஏற்றுக் கொள்வதாக சத்தியக்கடதாசி மூலம், உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று இணக்கம் தெரிவித்தது.தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தடை செய்யும் நோக்கில், சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் சிங்கள அடிப்படைவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தனி நாடும் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இந்த தேர்தல் அறிக்கையையும், தேர்தல் முடிவையும் ரத்துச் செய்யுமாறு கோரி, ஐந்து சிங்கள அடிப்படைவாத அமைப்புகள் சார்பில் ஏழு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் மனுச்செய்திருந்தன.அத்துடன் இலங்கையில் தனி நாடு ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே தமிழரசுக் கட்சி செயற்படுவதாக அறிவிக்குமாறு இந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், உயர்நீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன்போது, வட மாகாணசபை நன்றாக செயற்பட்டு வரும் நிலையில் இந்த மனுவை மேற்கொண்டு விசாரணை செய்வதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் கூறினார்.ஆனால், நாட்டில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தே தமது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசியல் யாப்பு மீறப்படவில்லை என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக முன்னிலையான சட்டவாளர் சுமந்திரன் வாதாடினார்.tna

அதனை ஏற்ற தலைமை நீதியரசர், தேர்தல் அறிக்கையில் பிரிவினைவாத கருத்துகள் உள்ளடக்கப்படவில்லை என உறுதிச் சான்றிதழ் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்குமானால், வழக்கை முடித்துக் கொள்ள முடியும் என சுமந்திரன் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, சட்டவாளர் கனகஈஸ்வரன் இவ்வாறு சத்தியக்கடதாசியொன்றை வழங்க இணக்கம் தெரிவித்தார்.இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வண.பெங்கமுவே நாலக்க தேரர், கலாநிதி குணதாச அமரசேகர, கல்லகே புண்ணியவர்த்தன, யூ.ஏ.அபயக்கோன், ரவிகுமார், உணவட்டுனே அனுரசிறி மற்றும் எச்.கே.டி.சந்திரசோம ஆகியோர் மேற்படி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் செயலருமான மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments
Loading...