Designed by Iniyas LTD
பிரேசிலில் பொலிஸ் தேடுதலில் துப்பாக்கிச் சூடு; 25 பேர் பலி
பிரேசிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சோதனை நடவடிக்கையின்போது நகரின் பவேலா என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
போதைக் கடத்தல்காரர்கள் சிறுவர்களை தமது கூட்டத்தில் சேர்த்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்தே பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.
இதன்போது மெட்ரோ ரயிலில் சென்றுகொண்டிருந்த இரு பயணிகளுக்கும் துப்பாக்கி காயம் ஏற்பட்டபோதும் அவர்கள் உயர் தப்பியுள்ளனர்.
ரியோவில் இடம்பெற்ற பொலிஸ் சோதனையின் போது அதிகம் பேர் கொல்லப்பட்ட சம்பவமாக இது உள்ளது என்று பொலிஸ் தலைவர் ரொனால்டோ ஒலிவெய்ரா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு பொலிஸார் நுழைந்ததை அடுத்து சந்தேக நபர்கள் கூரைகள் மேலால் தப்பி ஒடும் காட்சியை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன. இதில் இறந்தவர்களில் ஆதிக்கம் செலுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்களும் இருப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ பிரேசிலில் வன்முறை மிக்க மாநிலமாக இருப்பதோடு இங்கு பெரும் பகுதிகள் போதைக் கடத்தலுடன் தொடர்புபட்ட குற்ற கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.