Designed by Iniyas LTD
புலிகளின் வெடிபொருட்களை கண்டறிய அமெரிக்கா பயிற்ச்சி!
விடுதலைப் புலிகளால் குளங்களிலும், கடலேரிகளிலும், விட்டுச் செல்லப்பட்டுள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கே, அமெரிக்காவிடம் சி்றிலங்கா கடற்படையினர் பசுபிக் தீவில் பயிற்சி பெற்று வருவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையின் சுழியோடிகள் 20 பேருக்கு பசுபிக் தீவான குவாமில், அமெரிக்க கடற்படை பயிற்சிகளை அளித்து வருகிறது. கடந்த 7ஆம் நாள் ஆரம்பித்த இந்தப் பயிற்சிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.
இரண்டு நாட்டுப் படைகளுக்கும் இடையிலான நிபுணத்துவப் பரிமாற்றப் பயிற்சியாகவே, இந்தப் பயிற்சிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.
சுழியோடும் நடவடிக்கைகள் தொடர்பான இந்தப் பத்து நாள் பயிற்சியின் போது, குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படை, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள குளங்கள் மற்றும் கடலேரிகளில் விடுதலைப் புலிகளால் விட்டுச் செல்லப்பட்ட வெடிபொருட்கள் இருப்பதாகவும் அவற்றை அகற்றுவதற்கான நிபுணத்துவப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படையினரிடம் இருந்து பெறுவதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கம் என்றும் கூறியுள்ளது.