தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புஷ்வானமாகிப்போன ஜடேஜா ஆணடர்சன் விசாரணை

நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. உணவு இடைவேளையில் பெவிலியனை நோக்கி திரும்பிய போது, ஜடேஜாவை வம்புக்கு இழுத்த ஆண்டர்சன் அவரை திட்டி தீர்த்ததுடன் தள்ளிவிட்டு அவமதித்ததாக இந்திய கேப்டன் டோனி குற்றம் சாட்டினார்.anderson_jadega_002

இதையடுத்து ஆண்டர்சன் மீது நடத்தை விதி லெவல்-3ஐ மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்தியா புகார் செய்தது. பதிலுக்கு, ஜடேஜா ஆண்டர்சனை மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக இங்கிலாந்து தரப்பு குற்றம் சுமத்தியது. ஜடேஜா மீதான புகாரில் போட்டி நடுவர் டேவிட் பூன் ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதித்தார். இதை எதிர்த்து இந்திய அணி நிர்வாகம் அப்பீல் செய்தது.

இந்த நிலையில் ஆண்டர்சன் மீதான புகார் மற்றும் ஜடேஜாவின் அப்பீல் குறித்து ஐ.சி.சியால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ் (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) நேற்று விசாரணை நடத்தினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சவுதம்டன் ஓட்டலில் சங்கமித்திருந்த சம்பந்தப்பட்ட மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு தரப்பு வீரர்கள், அணி மேலாளர்கள், வக்கீல்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது இந்திய வீரர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை முன் வைத்ததுடன், சில ஆதாரங்களையும் சமர்பித்தனர். 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த விசாரணை கடைசியில் புஷ்வாணமாகி போய் விட்டது.

ஜடேஜா, ஆண்டர்சன் இருவர் மீதும் தவறில்லை என்று விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ் அறிவித்து, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

ஆண்டர்சன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 2 முதல் 4 டெஸ்ட் வரை விளையாட தடை விதிக்கப்படும் என்ற சூழல் நிலவியது. ஆனால் சம்பவம் நடந்த வீரர்களின் அறையின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமிரா அந்த சமயத்தில் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதற்கு பொறுப்பானவர்கள் பல்டி அடித்தனர். போதிய ஆதாரம் இல்லாததால் ஆண்டர்சன் தடையில் இருந்து தப்பி இருக்கிறார். இதனால் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவதில் எந்த சிக்கலும் இனி இல்லை. இந்த தீர்ப்பால் இந்திய அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Comments
Loading...