Designed by Iniyas LTD
பொருத்து வீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!
மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதிராக முதன்முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் இதுவரை நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
பொருத்து வீடுகள் தமது சூழலுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள், தமது வாழ்க்கை முறை, தமது பிரதேசத்தின் காலநிலை, பாரம்பரிய கட்டடமுறை என்பவற்றை கருத்திற்கொண்டு வீடுகளை அமைத்துத்தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.