Designed by Iniyas LTD
போக்குவரத்து தொழிலாளார்கள் வேலைநிறுத்தம்: விரைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தி.வேல்முருகன்
போக்குவரத்துத் துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் பெரும் துயரையே ஏற்படுத்தியதன் விளைவுதான் மே-15-ல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலைநிறுத்தம் எனவும், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்பினைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேறு வழியே இல்லாமல்தான் மே 15-ஆம் தேதியன்று வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படும். 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் 1.9.2016 அன்றே 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், அதுகுறித்த பேச்சைக்கூட தொடங்காமல் காலம் கடத்தப்பட்டே வந்தது. பலமுறை வாயிற்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் காதைப் பொத்திக் கொண்ட அரசு, ஒருவழியாக கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. அதில் முடிவு எட்டப்படாத நிலையில் கடந்த 28-ஆம் தேதி 2-ஆம் கட்ட பேச்சு நடந்தது. அதிலும் தீர்வு ஏற்படாமல் நேற்று முன்தினம் நடந்த பேச்சும் தோல்வியடைந்ததாலேயே மே 15-ஆம் தேதி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள்.
50 சதவீத ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்தல், ஓய்வூதியம், போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குதல் உள்ளிட்டவை தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள். குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி வளாகத்தில் நடைபெற்றுவந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை செயலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, நிதித்துறை துணை செயலர் வெங்கடேசன், அரசின் 9 போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்கள், நிதி ஆலோசகர், தனி அலுவலர், இணை நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர் மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கான 5 பேர் கொண்ட துணைக் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
48 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 96 பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கடைசிப் பேச்சும் தோல்வியடைந்த பின், அடுத்தகட்ட பேச்சு குறித்த தேதியை அறிவிக்காமலே கூட்டத்தை முடித்துக் கொண்டார் போக்குவரத்துத் துறை அமைச்சர்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஊதிய உயர்வு பற்றி இன்னும் இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தி முடிவு செய்யப்படும். தொழிலாளர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.1200 கோடி. இது 15,20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகள் உண்மை நிலையை விளக்கினர்:
“இந்தியாவிலேயே அதிகமாக, 1,45,000 தொழிலாளர்கள் பணியாற்றும் போக்குவரத்துத் துறை இது. 22,300 பேருந்துகள் ஓடுகின்றன. முக்கால்வாசி பேருந்துகள் ஓடத் தகுதியற்ற நிலையில்தான் ஓடுகின்றன. 10,000 புதிய பேருந்துகள் வாங்கினால்தான் நிலைமை சீராகும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.5000 கோடியை அரசே செலவழித்துவிட்டது. அதைச் செலுத்த வேண்டிய இடத்தில் செலுத்தவில்லை. அதனால்தான் 60,000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை.
ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடையும் இல்லை. தொழிலாளி இறந்த பிறகுதான் வழங்குவார்களோ என்னவோ? இப்படிப்பட்ட அரசிடம் ஊதியம் பற்றித்தான் பேசி என்னாகும்? அதனால் தொழிலாளிக்குத் தர வேண்டிய பாக்கியை முதலில் தாருங்கள் என்றோம். ஆனால் அமைச்சர் ரூ.500 கோடி அளவுக்கே நிதி ஒதுக்க முடியும் என்றார். இது தொழிலாளர்களுக்கு குறிப்பாக ஆண்டுக்கணக்கில் ஓய்வூதியமே இல்லாமல் அல்லாடுபவர்கனின் பிரச்சனையையும் தீர்க்காது. நலிவுற்ற போக்குவரத்துத் துறைக்கு புத்துயிர் ஊட்டவும் உதவாது என்ற நிலையில், ஒரு ரூ.1000கோடியையாவது முதற்கட்ட நிதியாக அறிவிக்குமாறு கேட்டோம். அதற்கு உடன்படாத்தாலேயே இந்த வேலைநிறுத்த முடிவு.” என்றனர் தொழிற்சங்க பிரதிநிதிகள்.
மே-15-ஆம் தேதி சென்னையில் மாபெரும் தொழிலாளர் பேரணி நடத்தி கோட்டையில் முதலமைச்சர், நிதித்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகிய மூவரையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப் போகதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் துயரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கட்சியின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அவர்களின் பிரச்சனைகளில் அவர்களுக்கு உறுதுணையாகவும் நிற்கிறது.
பிரச்சனைகளைப் போக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறது.
போக்குவரத்துத் துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் பெரும் துயரையே ஏற்படுத்தியதன் விளைவுதான் மே-15-ல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேலைநிறுத்தம்!
எனவே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்பினைத் தவிர்க்குமாறு தமிழக அரசைக் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கட்சியின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கமும் கேட்டுக் கொள்கிறது.