தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போராட்டம் நடத்திய யாழ் மக்கள் – எட்டிப்பார்க்காத ததேகூ

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட உறவுகள் காணாமல் போன தங்களது பிள்ளைகளை , கணவன்மாரை, சகோதர , சகோதரிகளை, தந்தையை மீட்டுத்தாருங்கள் எனக்கோரி கண்ணீர்விட்டு கதறி அழுதவாறு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் முடிவில் அனைவரும் இணைந்து மாவட்ட செயலகத்திற்குச் சென்று தங்கள் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியும் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தித் தருமாறு அரச அதிபரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். அத்துடன் காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரி ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.jaffna

முன்னதாக மாவட்ட செயலகத்தினுள் செல்ல பாதுகாவலர்கள் அனுமதி மறுத்திருந்த நிலையினில் அதனை தகர்த்து சென்றிருந்த மக்கள் அரச அதிபரை அவரது அலுவலகத்தில் வைத்து முற்றுகையிட்டிருந்தனர்.

புதிய ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கி வழங்குவதாக உறுதி அளித்ததனையிட்டே அவர்கள் பின்னர் அவர் அலுவலகத்தினிலிருந்து வெளியேறினர். அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக வடக்கு மாகாண ஆளுநரிடமும் முதலமைச்சரிடமும் சென்ற அவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை நேரினில் கையளித்திருந்தனர்.

இதனிடையே தாம் பகிரங்க அழைப்பினை விடுத்திருந்த போதும் எந்தவொரு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரோ மாகாணசபை உறுப்பினரோ எட்டிக்கூட பார்த்திருக்கவில்லையென தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் சில தரப்புக்கள் எம்மை வாக்கு சேகரிக்கும் கருவியாக பயன்படுத்த முற்பட்ட போதும் தாம் அதற்கு பலியாடாகவில்லையென தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரசன்னமாகி போராட்டத்தில் குதித்திருந்தார்.அத்துடன் பாதிக்கப்பட்ட ஒருவர் என்றவகையினில் தான் போராட்டத்தில் பங்கெடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

Comments
Loading...