Designed by Iniyas LTD
மகனைக் காணாது துடிக்கும் தாய் ஒருவரின் சாட்சியத்துடன் ஆரம்பமாகிய விசாரணை
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை, மன்னார் மாவட்டத்தில் நேற்றுக் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. மகனைக் காணாது துடிக்கும் தாய் ஒருவரின் சாட்சியத்துடன் ஆரம்பமாகிய விசாரணை மாலை 5 .30 மணிவரை நடைபெற்றது. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டவர்களுள் 65 பேர் நேற்று ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் 48 பேரே விசாரணைக்கு சமுகம் தந்திருந்தனர். மேலும் 25 பேர் புதிய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளனர்.
ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த 6 ஆவது அமர்வின்போது விடுதலைப்புலிகள், இராணுவம் மற்றும் கடற்படையினர் மீது காணாமற் போனோரின் உறவுகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னரே காணாமல் போயுள்ளனர் என்று சாட்சிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய விசாரணையின் போது சாட்சியமளித்த சிலர் தெரிவித்த விபரங்கள்-

சுற்றிவளைப்பில் இராணுவம் பிடித்துச் சென்ற மாணவி.
விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த ராமக்கிளி புவனேஸ்வரி என்பவர் தனது சாட்சியத்தில்- எனது மகளான ராமக்கிளி கீர்த்திகா (தரம்-10) படித்துக் கொண்டிருந்த மாணவி இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக முள்ளிவாய்க்காலில் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் போது விடுபட்டு விட்டார். அந்த நேரம் விடுதலைப்புலிகள் (இயக்கம்) கொண்டு போய் விட்டது. இந்த நிலையில் 15-05-2009 அன்று இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது எனது மகள் கைது செய்யப்பட்டு செட்டிக்குளம் சோன்-04 தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். தடுத்து வைக்கப்பட்ட எனது மகளை இராணுவத்தினர் தனிப்பட்ட முறையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் அன்று முதல் இன்று வரை எல்லா இடங்களுக்கும் அறிவித்ததோடு தேடித்திரிந்தோம். ஆனால் எவ்வித பலனும் இல்லை.மகளை காணவில்லை என அணைவருக்கும் சொல்லிச் சொல்லி எனக்கு மனப்பாடமாகி விட்டது. என்ன செய்வது? என்று தெரியவில்லை. இனி எங்கும் சென்று முறையிடுவதற்கும் இடமில்லை. என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
புலிகளுடன் இணைந்த மகனை காணவில்லை.
கருக்காக்குளத்தைச் சேர்ந்த சேமாலை மரியை என்ற தாய் தனது சாட்சியத்தின் போது, 28 வயதுடைய எனது மகன், ஆண்டாங்குளம் மரக்காலையில் வேலைக்குச் சென்ற பின் மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை.அந்த நேரம் அப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலே இருந்து வந்தது. 25-11-2006 ஆம் திகதி அன்று மகன் காணாமல் போனதுடன் இது சம்மந்தமாக அங்கிருந்த விடுதலைப் புலிகளிடம் கேட்ட போது அவர்கள் தமக்குத்தெரியாது என தெரிவித்திருந்தனர்.பின் 2007 ஆம் ஆண்டு மீண்டும் மகன் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது 10 நாட்களே எங்களுடன் வீட்டில் இருந்தார். அவரை தொடர்ந்து வீட்டில் இருக்கும்படி கேட்ட போது புலிகளின் பயத்தின் காரணமாக மீண்டும் அங்கு சென்று விட்டார்.
06-01-2009 அன்று முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் நான் அவரைக் கண்டேன். ஆனால் அப்பொழுது அவருடன் கதைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 2009 மே மாதம் 06 ஆம் திகதி எமது உறவுகள் அவரை மீண்டும் கண்டதாக சொன்னார்கள். 14-05-2009 அன்று நாங்கள் இடம் பெயர்ந்து வந்த போது இந்த செய்தி எங்களுக்கு உறவுகளினால் கூறப்பட்டது. நாங்கள் எங்கள் சொந்த இடத்தில் இருந்த போது வீழ்ந்த செல்லின் காரணமாகவே உழவு இயந்திரம் மூலம் பயணித்து ஆத்திமோட்டை, பாலியாறு, வஞ்சரிக் கிராமம்,பின் சுதந்திரபுரத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்தோம்.
நாங்கள் இருந்த இடங்களில் இருந்து அகதிகளாக புறப்படும் போது எங்களை எவரும் போக வேண்டாம் என்று தடுக்கவில்லை. பின் சுதந்திர புறத்தில் இருந்து இருட்டு மடுவிற்குச் சென்ற போது அப்பொழுது அது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. நாங்கள் இருட்டு மடுப்பகுதிக்குச் சென்ற போது இராணுவமே எங்களுக்குப் பாதை காட்டி எங்களை ஒரு காட்டுப்பகுதிக்குள் இருக்குமாறு எங்களைப் பணித்தார்கள். பின் இன்னுமோர் காட்டுப்பகுதியைக் காட்டி மயில் வாகன புரம் பகுதிக்கு கூட்டிச் சென்று அங்கு இராணுவம் எங்களை சோதனையிட்டு ஒரு வாகனத்தில் ஏற்றி கிளிநொச்சியில் உள்ள கமநல கேந்திர கட்டட பகுதி ஒன்றில் இறக்கி விட்டார்கள்.
எங்களை மட்டுமல்ல அங்கிருந்த எல்லோரையும் பின் வவுனியாவிற்கு பஸ் மூலம் அனுப்பினார்கள்.பின் ஓமந்தை சோதனைச்சாவடியில் விசாரனை செய்து செட்டிக்குளம் சித்திவிநாயகர் பாடசாலையில் தங்க வைத்தனர். 08 மாதம் அங்கிருந்தோம். பின் வேறு ஒரு முகாம் (சோன்-06) இற்கு அனுப்பினார்கள். 21-10-2009 அன்று சொந்த இடத்திற்கு மீண்டும் வந்தோம். வீடுகள் பெரும்பாலும் அழிந்திருந்தது. நேர்ப் திட்டத்தில் எனக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது.விவசாயம் வரட்சியில் பாதிப்படைந்து இருக்கின்ற போதும் வாழ்வாதார பிரச்சினையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.எனத் தெரிவித்தார்.
இராணுவம் பிடித்துச் சென்றதால், ஜனாதிபதியே பொறுப்பு.
ஓமந்தை தமிழ் மகாவித்தியாலயத்தில் இருந்த தனது கணவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் பிடிச்சுக் கொண்டு போனதாகவும், அரசாங்கமே தமக்கு பதில் சொல்ல வேண்டும் என கணவனை காணாது தவிக்கும்மனைவியொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், நாங்கள் வவுனியா முகாமிற்கு போய் விட்டோம் எனது கணவரை ஓமந்தை தமிழ் மகாவித்தியாலயத்தில அடைச்சு வைத்திருந்தார்கள். எங்களாலும் அவர் இருக்கிற இடத்திற்கு வந்து பார்க்க முடியாது. பின்னர் எங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவரை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் கொண்டு சென்றதாக எனக்கு தெரியப்படுத்தி இருந்தனர். எனக்கு 3 பிள்ளைகள் கூலி வேலை செய்து பழக்கமும் இல்லை எனக்கு. எப்படியும் வாழலாம் என்று வாழும் குடும்பமும் நாங்கள் இல்லை. ஒரு வரையறையுடன் வாழ்ந்த குடும்பம். அரசாங்கம் என்னைப் போல உள்ள யாருக்கும் உதவி செய்யவில்லை. இன்று அரசாங்கம் என்ன உதவி செய்கின்றது என்று கேட்கின்றனர் 5வருடம் ஆகியும் காணாமல் போனவர்களுக்கு முடிவினை அரசு கூறவில்லை. எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம் எனது கணவரை உயிருடன் தந்தாலே போதும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் தான் திசைமாற வைக்கின்றது.
நான் எனது கணவர் உயிருடன் வருவார் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளை வளர்த்து வருகின்றேன். எனது பிள்ளைகள் மற்றைய பிள்ளைகள் தந்தைமாருடன் செல்வதனைப் பார்த்து கவலைப்படுகின்றார்கள். சுகங்களை அனுபவிக்க வாய்ப்பில்லை. வறுமை துன்பம் தான் எனது பிள்ளைகளுக்கு. இராணுவம் கொண்டு போனால் அது யாருக்கு கீழ் வேலை செய்கின்றது . எனவே ஜனாதிபதி தான் இதற்கு பதில் வழங்க வேண்டும். வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த படம் ஒன்றில் மன்னார் கச்சேரி முன்னால் எடுக்கப்பட்ட படத்தில் எனது கணவர் நிற்கின்றார். பலர் எனது கணவரை கண்டதாக கூறியுள்ளனர். எனது கணவரை இராணுவம் கொண்டு திரிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
தப்பி வந்த வழியெங்கும் ஆயிரக்கணக்கான சிதறிய சடலங்களைக் கண்டோம்.
இரண்டாயிரம் மூவாயிரம் இறந்த சடலங்களை தாண்டியே இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தோம் என தாயாரை காணாது ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க வந்த மகன் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வரும் போது வழி எங்கும் ஆயிரக் கணக்கான சிதறிய உடலங்களைக் கடந்தே எங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தோம். அப்போது தான் எனது அம்மாவும் காணாமல் போனார். அவருக்கு 55 வயது. வைத்தியசாலைகள் , முகாம்கள் என எல்லா இடமும் தேடிவிட்டோம். இப்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியாது உள்ளது என அவர் மேலும் சாட்சியமளித்தார்.
மழையாகப் பொழிந்தது ஷெல்.
விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போது எங்கிருந்து வருகின்றது என்று தெரியாது ஆனால் ஷெல் மழையாக பொழிந்தது என ஆணைக்குழு முன் ஒருவர் சாட்சியமளித்தார். மகனை காணாது தவிக்கும் தாய் ஒருவர் சாட்சியமளிக்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாங்கள் நிறைய இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றோம். குண்டு வீச்சும் ஷெல்லும் தான் வந்து விழும். இதனால் பல ஆயிரக் கணக்கானவர்கள் இறந்தனர். எங்கிருந்து வருகின்றது என்று தெரியாது ஆனால் ஷெல் மழையாக பொழிந்தது . அதிலிருந்து தப்பித்தான் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தோம் என அவர் மேலும் சாட்சியமளித்தார்.
ஆட்டோவுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஆட்களை ஏற்றிக் கொண்டு பேசாலைக்கு ஆட்டோவில் சென்ற எனது கணவர் தொடர்பில் இதுவரை எதுவும் தெரியாது.அப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் எமது பிரதேசம் இருந்தது என கணவனை காணாது பிள்ளைகளுடன் வறுமையில் வாடும் பெண் ஒருவர் ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், நாங்கள் மன்னாரில் தான் இருக்கின்றோம். எனது கணவர் முச்சக்கர வண்டி வைத்திருந்தவர். சம்பவத்தன்று காலை ஆட்களை ஏற்றிக் கொண்டு பேசாலைக்கு போனவர் பிறகு திரும்பி வரவில்லை. அந்த நேரம் நாங்கள் இருந்த இடம் ஆமி கட்டுப்பாடு தான் செக் பொயின்ற் எல்லாம் இருந்தது. போனவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் தொலைபேசிக்கு எடுக்கும் போது நிறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஆட்டோ, தேசிய அடையாள அட்டை எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை எனது கணவன் குறித்து தகவல் எதுவும் தெரியாது தற்போது வருமானமும் இல்லை. நான் தான் கூலி வேலை செய்து குடும்பத்தை பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.