Designed by Iniyas LTD
மகிந்தவின் சீனப் பாதையில் ரணில் – மைத்திரி அரசு!
ஸ்ரீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனிப்பட்ட அரசியல் நலன்கள் சார்ந்து போட்டியிருந்தாலும் ஸ்ரீலங்காவின் அரசியல் விடயத்தில் இருதரப்பும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பதற்கு ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயம் நல்லதொரு உதாரணமாகும்.
மகிந்த ராஜபக்ச போட்ட சீனப் பாதையில்தான் இந்த விஜயம் நடைபெற்றிருக்கிறது. கடந்த காலத்தில் சீனாவுடன் மகிந்த ராஜபக்ச நெருங்கிச் செயற்படுகிறார் என்றும் ஸ்ரீலங்காவை சீனாவுக்கு மகிந்த ராஜபக்ச தாரை வார்க்கிறார் என்றும் இந்தியாவிலும் மேற்கிலும் ரணில் கூறிவந்தார். அதன் ஊடாக இந்தியாவினதும் மேற்கினதும் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க நாடினார்.
சீனாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் ஒரு போதும் பிரிவில்லை என்று சீனாவுக்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்கவிடம் சீனப் பிரதமர் தெரிவித்திருக்கிறார். கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச சீனாவுடன் நெருங்கிச் செயற்பட்டார் என்பதற்காக அவரது ஆட்சியை கவிழ்க்க மேற்கும் இந்தியாவும் உதவியது. இதனால் தமது ஆதிக்கம் இல்லாமல் போனதாக சீனா கவலை கொண்டது.
ஏனெனில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சீனாவின் பிரதமர் ஸ்ரீலங்கா வந்தபோது ஸ்ரீலங்காவே சீனாவாக மாறியது. நிகழ்ச்சிகள் சீன மொழியில் நடத்தப்பட்டன. கொழும்பு மாநகரமெங்கும் சீன மொழியிலான வரவேற்புப் பதாகைகளும் தகவல் பதாகைகளும் காணப்படடன. அந்தளவுக்கு சீனாவுக்கு அடங்கி, சீனாவின் ஆதிக்கத்திற்கு ராஜபக்ச இணங்கினார்.
அது மாத்திரமல்ல, கொழும்பில் சீனா பாரிய கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. அத்துடன் மிகவும் முக்கிய முதலீடாக கொழும்பு துறைமுக நகரத்திட்டமும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ரணில் – மைத்திரி தலைமையிலான அப்போதைய அணி அந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தது.
அவை இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதனால் ஸ்ரீலங்கா மக்களுக்கு பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்தார்கள். இடதுசாரிகளும் இனவாதிகளும் சூழலியலாளர்களும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை அரசியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, அறிவியல் ரீதியாக, சூழலியல் ரீதியாக எதிர்த்தார்கள்.
ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இன்றைய பிரதமர் அன்றைய மைத்திரியை இயக்கிய இயக்குனர் தாம் ஆட்சிக்கு வந்ததும் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்ததும் சில நாட்கள் நிறுத்தப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அது மாத்திரமல்ல கொழும்பு ஊடகம் ஒன்றினால் அதற்கு பாரிய அளவில் ஸ்ரீலங்கா முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது.
மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பதற்காக அவர் சீனாவுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்றும் நாட்டை சீனாவுக்கு தாரை வார்ப்பதாகவும் கூறிய ரணில் தரப்பு இப்போது தமிழர்களை பலவீனப்படுத்தும் நோக்கங்களுக்காக மேற்குலகுடன் நெருங்கிச் செயற்படுவதுடன் தமது பொருளாதாரத்தை பலப்படுத்த சீனாவுடன் இணைந்து செயற்படுகின்றது. ரணில் அரசுக்கும் ராஜபக்ச அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது இதன் ஊடாக புலப்படுகிறது.
அது மாத்திரமின்றி, சீனாவுக்கு செல்ல முன்னர் மகிந்த ராஜபக்சவை ரணில் விக்கிரமசிங்க சென்று சந்தித்துள்ளார். அத்துடன் சீனா விஜயம் மிகவும் முக்கியமான நல்ல விடயம் என்று மகிந்த ராஜபக்ச ரணிலை பாராட்டியுள்ளார். ஆக சீனாவை அணுகும் விடயத்தில் ரணிலும் மகிந்தவும் ஒற்றுமையுடன் செயற்படுகிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
இந்த விடயங்கள் மீண்டும் பிராந்திய ரீதியில் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கும். குறிப்பாக ரணிலின் சீன விஜயம் இந்தியாவுக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை. மேற்குலகும் கடும் அதிருப்தி அடையும். இந்த அரசியல், பொருளாதார, அதிகாரப் போட்டியில் தமிழர்களே பாதிகப்பட்டு விளைவுகளை சுமக்க நேரிடும். ஏனெனில் ஸ்ரீலங்காவுக்கோ, மேற்குலகிற்கோ, இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ இங்கு ஒடுக்கி அழிக்கப்படும் ஒரு இனம் பற்றி எந்த சிக்கலும் இல்லை. மாறாக அவர்களுக்கு தேவைப்பட்டால் அதனை மேற்கொள்ள அவர்களே ஒத்தாசை வழங்குவார்கள். முள்ளிவாய்க்காலில் வழங்கினார்கள்.
எனவே இந்த நிலையில் தமிழ் தலைவர்கள் தமிழர்களின் நலன்சார்ந்து பிராந்திய தளத்தில், உலகத் தளத்தில் கருத்துக்களை முன்வைப்பதும் செயற்படுவதும் முக்கியமானது. தமிழ் மக்களின் வென்றெடுக்கும் போராட்டத்தை மெய்மை தன்மையுடன் முன்னெடுக்கும் தலையினாலேயே அதைச் செய்ய இயலும்.
ஆசிரியர்,
செண்பகம்.
11.04.2016
