Designed by Iniyas LTD
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் திடீர் தாக்குதல்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பஞ்சாப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். காஷ்மீர் எல்லையில் இந்தியா–பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.
எனினும் இந்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப்பின் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷாபூர் கெர்னி பகுதியில் உள்ள முன்னணி நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் அரங்கேற்றியது.
சிறிய ரக பீரங்கிகள், தானியங்கி ஆயுதங்கள் உள்ளிட்ட சிறிய ரக தளவாடங்கள் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் எல்லையோர கிராமங்களில் பதற்றம் உருவானது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அவர்கள் பயன்படுத்தியதை போன்ற வலிமை உள்ள ஆயுதங்களால் இந்திய வீரர்கள் திருப்பி தாக்கினர். இரு பிரிவினருக்கும் இடையே நடந்த இந்த சண்டை நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.
நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் பாகிஸ்தான் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் உடனடி தகவல் எதுவும் இல்லை. காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி திடீரென பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இது, பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச்செய்வதற்காக அந்த நாட்டு ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையாக இருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. எனவே எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக இந்த மாவட்டங்களில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இங்குள்ள கடைகள் அனைத்தும் நேற்றும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள பெரோவல் பகுதி வழியாக நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் நாட்டவர் சிலர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை சரணடையுமாறு எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். ஆனால் இதை ஏற்காத அவர்கள் வீரர்களை நோக்கி வேகமாக வந்தனர். எனவே அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் குண்டு காயங்களுடன் பாகிஸ்தான் பகுதிக்கு தப்பி ஓடினார். எனினும் சில அடி தூரத்தில் அவரும் சுருண்டு விழுந்து இறந்தார். அவரது உடலை பாகிஸ்தான் வீரர்கள் எடுத்து சென்றனர். இந்திய பகுதிக்குள் விழுந்தவரிடம் இருந்து 9 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.45 கோடி ஆகும்.