Designed by Iniyas LTD
மகிந்தையின் கூட்டத்திற்கு சென்ற மக்களுக்கு தண்ணீர்கூட வழங்கவில்லை
சமுர்த்தி திட்டப் பயனாளிகளான எமக்கு ‘செழிப்பான வீடு’ திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபா தருவதாகக் கூறி 2,500 ரூபாவைத் தந்து விட்டு மிகுதி 7500 ரூபா பணத்தை ஜனாதிபதியின் கூட்டத்திற்கு வந்தால்தான் தருவோம் எனக் கூறினர். இதனால் நாம் பல சிரமங்களுக்கு மத்தியில் வந்தபோதும் எந்தப் பணமும் தரப்படவில்லையென பலர் ஊடகவியலாளர்களிடம் முறையிட்டனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது அங்கு வந்திருந்த மக்களே இவ்வாறு ஊடகவியலாளர்களிடம் முறையிட்டதுடன் பணம் எங்கே கொடுக்கப்படுகின்றதெனக் கேட்டவாறு அலைந்து திரிந்தனர்.
இது தொடர்பில் சமுர்த்தி பயனாளிகள் மேலும் கூறுகையில்;
சமுர்த்தி திட்டத்தின் பயனாளிகளான எங்களுக்கு ’செழிப்பான வீடு’ திட்டத்தின் கீழ் 2,500 ரூபா பணம் கொடுத்தார்கள். மீதி 7,500 ரூபா பணத்தை ஜனாதிபதியின் கூட்டத்திற்கு வந்தால் தருவோம் எனக் கூறியே காலை 6மணிக்கு பஸ்களில் அழைத்துவந்தனர். ஆனால் 7,500 ரூபா பணம் வழங்கப்படவில்லை. வெயிலில் நின்றதே மிச்சம்.
கமக்கார அமைப்பு ஊடாக வாழ்வாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்குவதாகவும் இன்றைய தினம்(நேற்று) துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருமாறும் அழைத்தார்கள். ஆனால் வழங்கப்படவில்லை என்றனர்.
நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்திற்கு யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 450ற்கும் மேற்பட்ட பஸ்களில் மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். இந்நிலையில் காலை 6 மணிக்கு அழைத்துவரப்பட்ட மக்களுக்கு நண்பகல் 12.30 மணிவரையில் தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் சமுர்த்தி திட்டத்தின் கீழ் நிதி பெற வந்தவர்களும், நீர் இறைக்கும் இயந்திரம் பெற வந்தவர்களும் மற்றைய மக்களும் வெயிலில் நின்றுகொண்டிருந்த நிலையில் பிரசாரக் கூட்டத்தை ஒழுங்கமைத்தவர்களினால் மக்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொட்டலங்கள் லொறியில் கொண்டுவரப்பட்டு முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாகவைத்து, மக்களை நோக்கி வீசப்பட்டன.
மிகுந்த பசியினால் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் முண்டியடித்து ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்ததுடன், சிலர் மயங்கியும் வீழ்ந்தனர். இந்த உணவினை மக்களை அழைத்து வந்த பஸ்களில் வைத்தே வழங்கியிருக்கலாம்.
இவ்வாறு அவமானப்படுத்தி வழங்கவேண்டுமா? என மக்கள் விசனம் தெரிவித்தனர். மேலும் காலையிலிருந்து நீண்டநேரம் காத்திருந்த மக்கள் பொறுமையை மீறி பிரசாரக் கூட்டத்திலிருந்து வெளியேறியதையும் காணமுடிந்தது.