தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் அமளி

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை கண்டித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதும், மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ, எம்.பி.க்கள் ரானோ எம்.ஷய்சா, குஃப்ரான் அசம் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் கேள்வி நேரத்தின் போது, மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், சஞ்சய் ராவுத் ஆகியோரின் வன்மமான பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.Lok-Saba

இதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அமைச்சர்களின் சர்ச்சை கருத்துகளை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார். இந்த பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள், கிரிராஜ் சிங்கை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவை 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியது, அப்போது அவை சுமூகமாக  நடந்து கொண்டிருந்த வேளையில், நில எடுப்பு மசோதாவை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.

இந்த அமளிக்கு இடையே ஏமன் விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்தார்.  இந்நிலையில் நில எடுப்பு மசோதாவை  திரும்பப்பெற வலியுறுத்தி தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதனால் அவை  மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...