Designed by Iniyas LTD
மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆக்கிரமிப்பை நிறுத்துமா ஸ்ரீலங்கா?
கிளிநொச்சியின் இரணைமடுவில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் சிங்கள இராணுவத்தால் பௌத்த விகாரை அமைக்கப்படுகின்ற நிகழ்வை வடகிழக்கு மக்கள் கடுமையாக எதிர்த்து எதிர்வினை புரிந்து வருகின்றனர். மக்கள், ஊகடங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இதனை கடுமையாகச் சாடியுள்ளனர். ஊடகங்கள் பலவும் இது தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா அரசு இன்னமும் மௌனமாகவே இருக்கிறது.
இரணைமடு ஈழத்தின் தனித்துவமான நிலப்பகுதி. தொல்பொருள் முக்கியமும் வாழ்வியல் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட பகுதி. இதனை சிங்கள, இராணுவ, பௌத்த மயப்படுத்த ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் முயல்கின்றன. ஏற்கனவே அங்கு பாரிய இராணுவ முகாமை ஆலய காணியில் அமைத்துள்ளது சிங்களப் படை. அத்துடன் அந்த ஆலயக் காணியில் தற்போது பாரிய விகாரையை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன் இரணைமடு குளத்தின் அணைக்கட்டில் புத்தர் சிலை ஒன்றும் யுத்தம் முடிக்கப்பட்ட நாட்களில் குடியேற்றப்பட்டது. கிளிநொச்சி மக்களின் வாழ்வாதாரத்தின் மைய ஊற்றாக – உயிர் நாடியாக இருக்கும் இரணைமடுக் குளப் பகுதியை ஆக்கிரமிப்பதே சிங்கள அரசின் நோக்கம். இது திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த நோக்கமாகும். இந்த நிலையில் இதனை வடகிழக்கு மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இச் செய்தி அறிந்து மக்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.
தாயகத்தில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை மையப்படுத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தற்போது ஸ்ரீலங்கா அரச படைகள் பெரும் அச்சத்தில் உள்ளன. மக்களின் போராட்டங்கள் தமது ஆக்கிரமிப்புக்கும் இருப்புக்கும் சிக்கல் என அஞ்சுகின்றன.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையில் இதனை கண்டித்தும் இதனை தடுத்து நிறுத்துமாறு ஸ்ரீலங்கா அரசை கோரியும் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற வடக்கு மாகாண சபையின் கோரிக்கையை சிங்கள அரசு ஏற்குமா? உடனடியாக இரணைமடு மீதான சிங்கள பௌத்த இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்துமா?
பிரேரணையை முன்மொழிந்த உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் உரையின் சிறு பகுதி
“தம்புள்ளையில் பழமை வாய்ந்த காளி கோவிலை இருந்த இடமே தெரியாத வாறு தடயமின்றி , இடித்தழித்து உள்ளனர். நாங்கள் சிங்கள மக்களுக்கோ , பௌத்த மதத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்கள் ஆலயங்களை இடித்தழிப்பது எங்கள் மண்ணிலே அடாத்தாக விகாரை கட்டுவதை தான் எதிர்க்கின்றோம். இன்று கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் முன் புறம் ஆலய குருக்களின் வீடு இருந்த காணியில் புத்தர் சிலை கட்டி விகாரை கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தடுக்காது விட்டால் 50 ஆண்டுகள் கழிய இது பௌத்தர்களின் புனித பூமி என கூறி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை இடித்தழித்து விட்டு , அந்த பிரதேசத்தை பௌத்த மயமாக்கி பௌத்தர்களின் புனித பூமி என பிரகடனப்படுத்தி விடுவார்கள். எனவே கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் முன்புறமாக கட்டப்படும் புத்தர் சிலை மற்றும் விகாரை என்பவற்றின் கட்டட பணிகளை நிறுத்த ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பௌத்த சாசன அமைச்சர் ஆகியோர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.”
இரணைமடுவுடன் கொக்கிளாய் போன்ற பல இடங்களில் சிங்கள அரசு முன்னெடுக்கும் சிங்கள பௌத்த இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். தமிழ் ஈழ மண்ணில் புத்தர் சிலைகளை நிறுவுவதையும் பௌத்த விகாரைகளை அமைப்பதையும் உடன் நிறுத்த வேண்டும். ஏனெனில் இது கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மாத்திரம் புதிதாக இடம்பெறும் விடயமல்ல. வடகிழக்கு எங்கும் சிங்கள அரசும் சிங்களப் படைகளும் செய்யும் இன அழிப்பு ஊழி.
கனகாம்பிகைக் கோவிலுக்கு அருகில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை அவ் ஆலய நிர்வாகத்தின் அனுமதி இன்றியோ அல்லது மக்களின் விருப்பமின்றியோ அமைக்கப்பட்டதாயின் அது பௌத்த ஆகமத்திற்கு முரணானது என்று பாலியகொட கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமலகனா தேரர், கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கூறியிருப்பதை உண்மையான பௌத்த அரசு நடைமுறைப்படுத்தும்.
பொறுத்திருந்து பார்ப்போம்! வடகிழக்கு மக்களின் கோரிக்கைக்கு சிங்கள அரசு செவி சாய்க்கிறதா? இல்லை வேறு வழிகளில் போராட வேண்டுமா என்பதை.
ஆசிரியர்,
செண்பகம்.
17.08.2016
