தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி – வைகோ

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி!  அவ்வாறு அமைந்தால், ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று, மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு, மதுரை அருகேயுள்ள யா.ஒத்தக்கடையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து வைகோ பேசியதாவது: தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் இயற்கை வளங்களை பறிபோகச் செய்துவிட்டனர்.vaikko

தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதுபற்றி அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறைகேட்டில் திமுகவுக்கும் பங்கு உள்ளது என்பதால், அதைப்பற்றி திமுக வாய் திறக்கவில்லை.மது இல்லாத தமிழகம், ஊழல் அற்ற ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம் என்ற செயல்திட்டங்களின் அடிப்படையில், மக்கள் நலக் கூட்டணி உருவாகியது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் முன்னேறி இருப்பதைக் கண்டு கட்சிகள் அச்சப்படுகின்றன. வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைக்கும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை மீட்டு, நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவோம். விவசாயிகள், மீனவர்கள் நலன் காக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் வைகோ.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி: அதிமுக, திமுக இரு கட்சிகள்தான் ஒன்றுக்கு மற்றொன்று மாற்று என்ற நிலையை மக்கள் நலக் கூட்டணி மாற்றியிருக்கிறது.

கூட்டணி ஆட்சி அமையும்போதுதான் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும். ஆனால், தேர்தலுக்கு முன்பு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டு, அரசியல் வரலாற்றில் முன்னுதாரணத்தை இக்கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக இரு கட்சிகளுமே பாஜகவுடன் ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்தன. இந்த இரு கட்சிகளுமே தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவது வழக்கம். தமிழகத்துக்கு வளமான எதிர்காலத்தை அளிப்போம் என்ற உறுதியோடு மக்கள் நலக் கூட்டணி செயல்திட்டத்தை வகுத்துள்ளது. இது தேர்தலுக்கான அணி அல்ல, அரசியல் மாற்றத்துக்கான விதை என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி: பாஜக அரசின் எதிர்மறையான செயல்பாடுகளால், அந்தக் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. பாஜகவோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது விலகி வருகின்றன. பெரியாரின் வழிவந்த திராவிடக் கட்சிகள், அவரது கொள்கைகளை கைவிட்டுவிட்டன.

தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் அந்தக் கட்சிகள் ஊழல் கட்சிகளாக மாறிவிட்டன. இயற்கை வளங்கள் பறிபோவதை இரு கட்சிகளுமே தடுக்கவில்லை. இதற்கெல்லாம் மாற்றாக மக்கள் நலக் கூட்டணி களம் இறங்கியுள்ளது என்றார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: மாற்று அரசியல் என்பது தற்போதுள்ள ஆட்சிக்கு மாற்று என்பதல்ல. விளிம்புநிலை மக்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே மாற்று அரசியல். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடக்கும் யுத்தம். தமிழகத்தைக் காப்பாற்ற மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே முடியும் என்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் து. ராஜா: அயோத்திதாசப் பண்டிதர், தந்தைப் பெரியார், சிங்காரவேலர் தோன்றிய தமிழ் மண்ணில் தற்போது சாதி, மதவெறி சக்திகள் தலைதூக்கி வருகின்றன. மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த சக்திகளிடமிருந்து தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்: திமுக, அதிமுகவை, மக்கள் நலக் கூட்டணியால் வீழ்த்த முடியுமா எனக் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் நலக் கூட்டணி, இரு கட்சிகளையும் வீழ்த்தும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 78 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சியில் இவை ஒழிக்கப்படும் என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்: தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதால், மக்கள் நலக் கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணிக்கு யார் வாக்களிப்பார்கள் என்று கேள்வி கேட்கின்றனர். தமிழகத்தில் புதிதாக 1 கோடி இளைஞர்கள், பெண்கள் வாக்காளர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களின் வாக்கு மக்கள்நலக் கூட்டணிக்கு கிடைக்கும் என்றார்.

Comments
Loading...