தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஆண்களை சந்தித்த ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 4–ம் கட்ட ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை சென்னையில் நடத்தி வருகிறார்.stalin

இன்று திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி மீன் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். பார்த்தசாரதி கோவில் அருகேயுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஆண்கள் என 152 பேர் கலந்து கொண்டனர். மாட்டாங்குப்பம் முனி, சிந்தாதிரிப்பேட்டை கனி, சந்திரன், அரி, அயோத்தியா குப்பம் சரோஜா, கெனால் தெரு செல்வம், மாலதி உள்பட பலர் தங்களது குறைகளை கூறினார்கள். நடுக்குப்பம் கேசவல்லி பேசுகையில், ‘மதுவை ஒழிக்க வேண்டும். மதுவால் குடும்பங்கள் சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வந்து மக்களை காப்பாற்றுங்கள் என்றார். மற்ற மீனவர்கள் பேசும் போது தற்போதைய சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் நெருக்கடியாக உள்ளதால் அருகிலேயே நல்ல போக்குவரத்து வசதியுடன் புதிய மார்க்கெட் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை 220 சட்டமன்ற தொகுதிகளில் முடித்துள்ளேன். இன்னும் 14 தொகுதிதான் உள்ளது.

பிப்ரவரி 12–ந் தேதிக்குள் நமக்கு நாமே பயணத்தை முடிக்க உள்ளேன். இங்கு பேசியவர் ஒரு பெண். மதுவை ஒழிக்க வேண்டும் என்று உருக்கமாக கூறினார். மதுவிலக்கை அமல்படுத்த ஒட்டு மொத்த தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்பட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். சட்டசபையில் நாங்களும் இதை பேசினோம். ஆனால் மதுவிலக்கை அமல்படுத்த மாட்டோம் என அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் அவரால் நிச்சயமாக இப்படி சொல்ல முடியாது. நான் உடனே எழுந்து மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாவிட்டாலும் படிப்படியாகவாவது இந்த அரசு அமல்படுத்துமா என்று கேட்டேன். ஆனால் அதுவும் முடியாது என்று கூறிவிட்டார்கள்.

எனவே கலைஞர் தலைமையில் அமையும் தி.மு.க. ஆட்சியில் இதை கண்டிப்பாக அமல்படுத்துவோம். கலைஞர் சொன்னது போல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவது நான் முதல் கையெழுத்தாக இருக்கும். செய்வதை தான் சொல்வோம், சொல்வதைத் தான் செய்வோம். மக்களிடமும் நாங்கள் துணிந்து குறைகேட்டு வருகிறோம். இதே போல் அ.தி.மு.க.வால் குறை கேட்க முடியுமா? நான் சென்னை மேயராக இருந்த போது 10 மேம்பாலங்கள் கட்டினேன். ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் 4ž வருடத்தில் சென்னையில் ஒரு மேம்பாலமாவது கட்டியிருக்கிறார்களா? அல்லது அதற்கான முயற்சியாவது எடுத்தார்களா? என்றால் இல்லை. நான் மேயராக இருந்த போது மாநகராட்சி கூட்டத்தில் எல்லா கட்சி உறுப்பினர்களையும் பேச அனுமதிப்போம். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளை பேச விடுவதில்லை.

முதல்–அமைச்சருக்கு ‘ஜால்ரா’ போட்டு பேசுபவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். கலைஞரை கேவலப்படுத்தியும், என்னை கொச்சைப்படுத்தியும் பேசுகிறார்கள். சென்னையில் அடிப்படை பிரச்சினைகள் எதையும் தீர்க்கவில்லை. பெரு வெள்ளம் கூட இந்த ஆட்சியால் உருவான செயற்கையான வெள்ளம் தான். செம்பரம்பாக்கம் ஏரியை முறையாக திறந்து விடாமல் ஒரேயடியாக திறந்ததால் தான் சென்னை தத்தளித்தது. முதல் – அமைச்சர் ஜெயலலிதா 1991–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது எத்தனையோ வாக்குறுதிகளை அளித்தார். கச்சத்தீவை மீட்டேன் என்று சபதம் போட்டார். ஆனால் இதுவரை அதற்கான முயற்சியில் ஈடுபட்டாரா? என்றால் இல்லை. பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதுகிறார். இப்போது சட்டசபையில் கவர்னர் உரை மீது 1¼ மணி நேரம் பேசினார். அப்போது கூட கச்சத்தீவு பற்றியும், மீனவர்கள் பற்றியும் அவர் பேசவில்லை. கலைஞர் ஆட்சியில் மீனவர்களுக்காக மீன்வளர்ச்சிக் கழகம் உருவாக்கினோம்.

மீனவர்கள் கடன் தள்ளுபடி, மீன் பிடி துறைமுகம் மேம்பாடு புதிய துறைமுகங்கள், சென்னை துறைமுகத்தை மேம்படுத்தியது உள்ளிட்ட பல திட்டங்கள் செய்து கொடுத்தோம். மீனவர்களின் குழந்தைகளை மருத்துவம், என்ஜினீயரிங், சட்டம் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி பயில நிதி உதவி செய்ததும் தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால் இன்று ஜெயலலிதா எந்த சலுகை திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் இன்னும் நிறுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்த ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க. எம்.பி.க்களும் மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுப்பதில்லை. அம்மா அழைப்பு மையம் புதிதாக தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் தொலைபேசி எண் 1100–க்கு நானும் 10 நாளாக போன் செய்து பார்க்கிறேன். எப்போதும் ‘பிசி’ என்று வருகிறது. எனவே அது மக்களை ஏமாற்ற கொண்டு வந்த திட்டமாகும். இன்னும் 2½ மாதத்தில் தேர்தல் வந்துவிடும். தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடமைகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், ஐ.கென்னடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அன்பகம் கலை சேப்பாக்கம் மதன் மோகன், பகுதி துணை செயலாளர் சிதம்பரம் உள்பட பலர் முன்னின்று கவனித்தனர்.

Comments
Loading...