Designed by Iniyas LTD
மண்ணெண்ணெய்க்கு நேரடி மானியம் குறித்து மத்திய அரசு பரிசீலனை : தர்மேந்திர பிரதான்
சமையல் எரிவாயு உருளைகளுக்கு நேரடி மானியம் வழங்குவதைப் போல, மண்ணெண்ணெய்க்கான மானியத்தையும் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றபோது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சமையல் எரிவாயு உருளைகளுக்கான நேரடி மானியத் திட்டம் முழு வெற்றியடைந்த பிறகு மண்ணெண்ணெய்க்கும் அதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தில்லியில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழித்ததைப் போன்று ஹரியாணா உள்ளிட்ட சில யூனியன் பிரதேசங்களிலும் அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
பெட்ரோலியப் பொருளுக்கு ஜிஎஸ்டி: இதனிடையே, மற்றொரு கேள்விக்கு, தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கையில், மாநில அரசுகளுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அது எப்போது என்பதை கூற இயலாது. ஏனெனில், நாம் கூட்டாட்சி முறையைக் கடைப்பிடிப்பதால் மாநில அரசுகளிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்.
பெட்ரோலியப் பொருள்கள் மூலம் தங்களுக்கு ஏராளமான வரி வருவாய் கிடைப்பதால் அவற்றை ஜிஎஸ்டியின் கீழ் இணைக்க பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
தமிழகம் தவிர்த்த ஏனைய மாநிலங்களும், சில யூனியன் பிரதேச அரசுகளும் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரியை அதிகரித்துள்ளன. எனவே, நாடெங்கிலும் சீரான வரி விதிப்பு முறையை ஏற்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது என்றார் அவர்.
விலை குறைப்பு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை மத்திய அரசு குறைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் விலை 27 முறையும், டீசல் விலை 21 முறையும் குறைக்கப்பட்டுள்ளது என்றும், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் போக்குவரத்து மற்றும் சுத்திகரிப்பு செலவு குறைவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஏற்றுமதியில் இராக் முதலிடம்: இதற்கிடையே, மற்றொரு கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சவூதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி இராக் முதலிடம் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.